விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் தமிழக வெற்றிக்கழகம் கட்சியின் மாநாடு வரும் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான மேடை அமைக்கும் பணி, கடந்த 4ம் தேதி பூமி பூஜையுடன் துவங்கியது. சென்னை, திருவேற்காடை சேர்ந்த பந்தல் அமைப்பாளர்கள் விஸ்வநாதன், ராமநாதன் ஆகியோர் பூமி பூஜை அன்றே பணியை துவங்கியுள்ளனர். 85 ஏக்கர் பரப்பளவில் உள்ள மாநாட்டு திடலில், மேடையானது பைபாஸ் சாலையில் செல்பவர்கள் பார்க்கும் வகையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட உள்ளது.
ரயில் பாதையில் இருந்து 500 மீட்டர் தள்ளி, மேடை அமைக்கப்படுவதால், தொண்டர்கள் ரயில்பாதைக்கு செல்வதை தடுக்க, தடுப்பு வேலி அமைக்கப்பட்டு வருகிறது. மாநாடு மேடை தமிழக அரசின் புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் தலைமை செயலகம் வடிவில், 60 அடி அகலத்தில், 170 அடி நீளத்திற்கு 10,200 சதுர அடி பரப்பளவில் அமைகிறது. மேடையில் கட்சி தலைவர் விஜய் மற்றும் வி.ஐ.பி.,க்கள் தங்க அனைத்து வசதிகளுடன் கூடிய தனித்தனி அறைகள் ஏற்படுத்தப்பட உள்ளது.
தற்போது பந்தல் அமைக்கும் பணியாளர்கள் தங்குவதற்கும், சமைப்பதற்கும் ஷெட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்கு வரும் தொண்டர்கள் உணவருந்த வசதியாக மாநாட்டு திடலில் 500 ஸ்டால்கள் அமைக்கப்பட உள்ளது. அவ்வப்போது மழை பெய்து வந்தாலும், மாநட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பாக பணிகளை முடித்திட திட்டமிடப்பட்டுள்ளது. மாநாடு பணிகளை மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் அவ்வப்போது பார்வையிட்டு, ஆலோசனை வழங்கி வருகிறார்.