தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் தொடா்ந்து பெய்த மழையால் பேரருவியில் 2ஆவது நாளாக திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்தது.
குற்றாலம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் பெய்து வரும் தொடா்மழையால் குற்றாலம் பேரருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.
இரண்டாவது நாளாக திங்கள்கிழமையும் வெள்ளப்பெருக்கு நீடித்ததால் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீட்டிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பழைய குற்றாலம், புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா். பிற்பகலில் ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனா். ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீரில் கூட்ட நெரிசலின்றி சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனா்.