கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரம் பகுதியில் தனியார் மேல்நிலைப் பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளியில் நந்தகுமார் என்ற மாணவர் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தந்தை அருகே உள்ள கூடலூர் கவுண்டம்பாளையம் நகராட்சியில் வாட்டர் ஆப்பரேட்டராக பணியாற்றி வருகிறார். தாயாரின் உடல்நிலை காரணமாக மாணவர் பள்ளியில் உள்ள விடுதியில் கடந்த ஓராண்டாக தங்கி 12ம் வகுப்பு படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை விடுதியில் சமையல் எரிவாயு காலியாகிவிட்டதால், காலை சிற்றுண்டியாக ரொட்டி வழங்கியுள்ளனர். மதிய உணவுக்கு விறகு அடுப்பைப் பயன்படுத்தும் சூழல் ஏற்பட்டதால், மாணவர்களை அழைத்து அங்கிருந்த காய்ந்த மரங்களில் ஏறி, விறகு உடைக்குமாறு ஆசிரியர்கள் கூறியுள்ளனர். ராஜ்குமார், நந்தகுமார் உள்ளிட்ட சில மாணவர்கள் ஆசிரியர் கூறியதற்கு இணங்க காய்ந்த கிளைகளைக் கொண்ட மரத்தில் எந்தவித பாதுகாப்பும் இன்றி ஏறியிருக்கின்றனர்.

காய்ந்த மரம் என்பதால் அதில் உள்ள கிளைகள் வலு இல்லாமல் இருந்துள்ளன. அதில் கால் வைத்து ஏறிய மாணவர் நந்தகுமார் எதிர்பாராத விதமாக கிளை உடைந்ததில், சுமார் 15 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்துள்ளார். இந்த அசம்பாவித சம்பவத்தால் மாணவருக்கு இடுப்பு எலும்பு உடைந்துள்ளது. விபத்து நடந்து ஒரு மணி நேரம் அறைக்குள் வைத்து ஐஸ் கட்டிகளை வைத்து சரிசெய்ய முயற்சி செய்துள்ளனர். அதையடுத்து மாணவருக்கு வலி அதிகமாகவே, அங்கிருந்த காவலாளியிடம் வாகனத்தைப் பெற்று மாணவரை அழைத்துக்கொண்டு ஜோதிபுரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

மேலும் மாணவன் விழுந்தது குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கவில்லை எனத் தெரிகிறது. பள்ளி அருகே இருந்தவர்கள் தெரிவித்த தகவலின் அடிப்படையில் அதிர்ந்துபோன பெற்றோர், உடனே பள்ளிக்கு ஓடிவந்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டுள்ளனர். ஆனால், அவர்கள் முறையான பதில் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here