சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் அந்த 14 வயது சிறுமி. எடப்பாடி அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார். அதே பகுதியை சேர்ந்த பக்கத்து வீட்டுக்காரர் 32 வயதான சதீஷ். தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர்.
 
சம்பவத்தன்று மாணவியின் பெற்றோர் கூலி வேலைக்குச் சென்ற நிலையில், வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் சதீஷ் பாலியல் சீண்டிலில் ஈடுபட்டிருக்கிறார். அப்போது மாணவியின் பெரியப்பா அங்கு வந்துள்ளார். சிறுமிக்கு நேர்ந்த அவலத்தைப் பார்த்து அதிர்ந்துபோன அவர் சதீஷைப் பிடித்து சரமாரியாகத் தாக்கியுள்ளார்.
 
சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடி வர அவர்களும் சேர்ந்துக் கொண்டு, சதீஷை சரமாரியாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்குள்ளான சிறுமி, வீட்டிற்குள் ஓடிச்சென்று, மின் விசிறியில் தாயின் சேலையால் தூக்கிட்டு கொண்டார். இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியில் உறைந்துப் போயினர். உடனே மாணவியை மீட்ட அவர்கள், ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
 
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தேவூர் போலீசார், பாலியல் தொல்லை கொடுத்து தாக்குதலுக்கு ஆளான சதீஷை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர் படுகாயமடைந்திருந்ததால் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே சிறுமியிடம் அத்துமீறியதால் சதீஷை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து, அவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று சிறுமியின் உறவினர்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here