சென்னை ராயப்பேட்டையில் இளம்பெண் ஒருவர் போதைப் பொருள் விற்பனை செய்வதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே, சாதாரண உடையில் போலீஸார் நேற்று காலை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்த இளம் பெண்ணின் நடவடிக்கைகளை போலீஸார் கண்காணித்தனர். சிறிது நேரத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர், அந்த பெண்ணிடம் இருந்து பார்சல் ஒன்றை வாங்குவதைப் பார்த்து போலீஸார் விரைந்து சென்று அந்த இளம்பெண்ணை சுற்றிவளைத்து பிடித்தனர்.

அவரை சோதனை செய்தபோது, அவரிடம் 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தப் பெண்ணை அண்ணாசாலை காவல் நிலையம் அழைத்து வந்து போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், அவர் சேலத்தில் உள்ள இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த மீனா (27) என்பதும், நடிகர் ஆர்யா நடிப்பில் வெளிவந்த ‘டெடி’ உள்ளிட்ட திரைப்படங்களிலும், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சுந்தரி’ என்ற சீரியலில் துணை நடிகையாக நடித்திருப்பதும் தெரியவந்தது. கோவிலம்பாக்கம் கண்ணதாசன் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் அவர், எஸ்தர் என்ற தனது இயற்பெயரை மீனா என மாற்றியிருப்பதும், சினிமா மற்றும் சீரியலில் போதிய வாய்ப்பு வராததால் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாகவும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

மேலும், அவர், வாட்ஸ்அப் குழு மூலம், சின்னத்திரை நடிகர்கள் மற்றும் இளைஞர்கள் பலருக்கு போதைப்பொருள் விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர் யாரிடம் இருந்து போதைப் பொருளை வாங்கினார், அவருடன் தொடர்பில் உள்ள நபர்கள் யார் என்பது குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீனாவிடம் இருந்து 5 கிராம் மெத்தபெட்டமைன் போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீஸார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here