எஸ்பிளனேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் மதியம் மண்ணடி, ஜோன்ஸ் தெருவில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியே 2 இருசக்கர வாகனங்களில் வந்த நபர்களை நிறுத்தி விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்துள்ளனர்.
இதையடுத்து சந்தேகத்தின் பேரில், அவர்களை சோதனை செய்தபோது, அவர்கள் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப் பொருள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப் பொருளை கடத்தி வந்ததாக கொடுங்கையூர் தினேஷ் பிரதாப் (23), தண்டையார்பேட்டை சந்தோஷ் (18), புழல் பிரவீன் (20), பழைய வண்ணாரப்பேட்டை தேஜஷ் (18), மணலி பாத்திமா மவுபியா (25) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 கிராம் மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த போதைப் பொருள் கடத்தலுக்கு பாத்திமா மவுபியா தலைவியாக இருந்து செயல்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.
பரங்கிமலை காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், கடந்தமாதம் 24-ம் தேதி ஆலந்தூர், மெட்ரோ ரயில் வாகன நிறுத்தம் அருகே கண்காணித்தனர். அப்போது, அங்கு ஆம்பெட்டமைன் என்ற ஒரு வகையான போதைப்பொருள் வைத்திருந்த சென்னை ஷெனாய் நகர் அருண் (40), நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஈஸ்ஜான் (34), சென்னை முடிச்சூர்மெக்கல்லன் (42) ஆகிய 3 பேரைகைது செய்தனர்.
அவர்களிட மிருந்து ஆம்பெட்டமைன், ரூ.1 லட்சம் பணம் மற்றும் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் உடனடியாக நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக இருந்த நபர்களைதனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடி வந்தனர்.
குறிப்பாக நந்தம்பாக்கம் குற்றப்பிரிவு காவல்நிலைய ஆய்வாளர் தலைமை யிலான தனிப்படையினர் கர்நாடகா மாநிலம் பெங்களூரு விரைந்து தேடுதல் வேட்டை நடத்தினர். அங்கு பதுங்கி இருந்த நைஜீரியா நாட்டைச் சேர்ந்த ஒனுஹா சுக்வு (38) என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர். அவரிடமிருந்து மற்றொரு வகையான போதைப் பொருளான மெத்தம்பெட்டமைன் மற்றும் ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.