தமிழகத்தில் டெல்டா உள்பட பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருவதால், ஒருசில மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அந்தவகையில், விழுப்புரம், திருவள்ளூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (நவ. 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோன்று புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
காஞ்சிபுரம், சென்னை, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நாளை புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகள், அதனை ஒட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் நிலவிய புயல் சின்னம் இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது.
இது இலங்கை – திரிகோணமலையிலிருந்து தென்கிழக்கே 310 கி.மீ. தொலைவிலும், சென்னையிலிருந்து தெற்கு – தென்கிழக்கே 800 கி.மீ. தொலைவிலும் நிலைகொண்டுள்ளது.
இதற்கிடையே, டெல்டா மாவட்டங்களில் இன்று (நவ. 26) அதிக கனமழைக்கான சிவப்பு நிற (ரெட் அலர்ட்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் நாளை (நவ. 27) சிவப்பு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.