புதுச்சேரி:

புதுச்சேரி மாநிலம், முத்தியால்பேட்டை சோலை நகரைச் சேர்ந்த 9 வயது சிறுமி அங்கு உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2ஆம் தேதியன்று வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென்று காணாமல் போனார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் ஊர் முழுக்க தேடியும் சிறுமி கிடைக்கவில்லை. இதனால் பதறிப்போனவர்கள் முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். வழக்குப்பதிவு செய்த போலீசார் சோலை நகரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவிகள் கேமிரா காட்சிகளைக் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அதில் சிறுமி, தனது வீடு இருக்கும் தெருவில் நடந்து செல்வது பதிவாகியிருந்தது. அதன் பிறகு அவர் மாயமானதும் தெரியவந்தது. இதன் மூலம், சோலை நகரை தாண்டி சிறுமி வெளியே சென்றிருக்க வாய்ப்பில்லை என்பதை உறுதி செய்த அதிகாரிகள் அப்பகுதியில் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று சோதனையிட்டனர். இந்த நிலையில்தான் அந்த படுபயங்கர தகவல் போலீசாருக்குக் கிடைத்துள்ளது. செவ்வாய் கிழமை மதியம் 2 மணியளவில் சிறுமியின் ஏரியாவில் உள்ள ஒரு மாட்டு கொட்டையின் பின்புறமுள்ள சாக்கடை கால்வாயில் , சந்தேகத்திற்கிடமாக மூட்டை ஒன்று கிடப்பதாக தகவல் கிடைத்தது.

விரைந்து சென்ற போலீசார் சாக்கு மூட்டையை கைப்பற்றி திறந்த போது, அதில் காணாமல் போன சிறுமி சடலமாக கிடந்தது பார்த்து அதிர்ந்து போனார்கள். சிறுமி கொடூரமான முறையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு மூட்டையில் உயிரிழந்து கிடந்தார். சிறுமியின் சடலத்தை மீட்டு வெளியே எடுத்து வந்த பொழுது உறவினர்களும் பெற்றோர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.இத்தகவல் காட்டுத் தீபோல் பரவி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அங்கு குவித்ததால் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

பின்னர் நீண்ட போராட்டத்திற்குப் பின் சிறுமியின் உடலை மீட்டு போலீசார் உடற்கூராய்விற்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். காணாமல் போன சிறுமி சாக்கு மூட்டையில் சடலமானது எப்படி? கொடூரமாக சிறுமியை கொன்று வீசியது யார்? உள்ளிட்ட கோணங்களில் தீவிர விசாரணையைத் தொடங்கினர்.

சிறுமி வீட்டிலிருந்து 50 அடி தொலைவில் உள்ள, சாக்கடை கால்வாயில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டதால் கொலையாளி இதே பகுதியை சேர்ந்தவராகத்தான் இருக்கும் என்ற முடிவுக்கு வந்தனர். அதன்படி ஏரியாவில் வசிக்கும் நபர்களிடம் விசாரணையில் ஈடுபட்டிருந்த போது, போலீசாரை கண்டதும், பதற்றத்துடன் நடந்து கொண்ட 19 வயதான கருணாஸ் மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கைகளில் நகக்கீறல்கள் தென்பட, கேட்ட கேள்விக்கு நடுக்கத்துடன் பதிலளித்ததால் கருணாஸை போலீசார் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.

அப்போது தான் 54 வயதான விவேகானந்தன் குறித்தும், சிறுமி கொலைக்கான பின்னணி குறித்தும் வெட்ட வெளிச்சமானது. சம்பவத்தன்று வீட்டின் வெளியே விளையாடி கொண்டிருந்த சிறுமியை அவ்வழியாக சென்ற விவேகானந்தன் பார்த்துள்ளார். அருகே சென்று சிறுமியிடம் பேச்சு கொடுத்தவர், ஐஸ்கீரிம் வாங்கி தருவதாகக் கூறி, அதே தெருவில் உள்ள தனது பாழடைந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு வைத்து பாலியல் துன்புறுத்தல் கொடுக்க, சிறுமி அச்சத்தில் அலறி துடித்துள்ளார்.

அப்போது அவ்வழியாக சென்ற கருணாஸ், சத்தம் கேட்டு விவேகானந்தனின் வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொண்டிருந்ததை பார்த்த கருணாஸ், தானும் அந்த வக்கிர செயலில் ஈடுபட்டுள்ளார். இரு கயவர்களிடம் சிக்கி துடிதுடித்துப் போன சிறுமி தப்பிக்க முயன்றதில், திடீரென்று மயங்கி விழுந்தார். அதை பார்த்து சிறுமி உயிரிழந்து விட்டதாக நினைத்த விவேகானந்தன், கருணாஸ் இருவரும் கோரத்தின் உச்சக்கட்ட செயலில் ஈடுபட்டுள்ளனர்.

சிறுமியின் கை, கால்களை கட்டி சாக்கு மூட்டையில் உடலை போட்டு வீட்டின் பின்புறத்தில் உள்ள கால்வாயில் தூக்கி வீசியுள்ளனர். இதில் சுயநினைவை இழந்த சிறுமி, தண்ணீர் இன்றி மூச்சடைத்து துடிதுடித்து உயிரிழந்ததாக தெரிகிறது. இந்த கோர சம்பவம் விசாரணையில் தெரியவர, விவேகானந்தன், கருணாஸ் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த சிறுமிக்கு நீதி கேட்டு புதுச்சேரி முழுக்க பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கைதானவரின் வீட்டின் முன் குவிந்த பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கொலையாளிகளுக்கு உடனடியாக, உரிய தண்டனை பெற்று தர வேண்டும் என பொதுமக்கள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.இந்த நிலையில், 9 வயது சிறுமியின் கொடூர கொலை தற்போது நாடு முழுக்க பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here