சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் கைதானவர் மீது, திருட்டு, கொள்ளை உட்பட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். பல குற்ற வழக்குகளில் தொடர்புடைய ஞானசேகரன் எப்படி சுதந்திரமாக நடமாட முடிந்தது என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வரும் நிலையில், ஆள் கடத்தல் வழக்கிலும் அவர் சிக்கியது அம்பலமாகியுள்ளது.
 

சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், பாதிக்கப்பட்டவர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி ஞானசேகரன் என்ற நபரை கைது செய்தனர். இந்த சம்பவத்தைக் கண்டித்து அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தின.

அண்ணா பல்கலை மாணவிக்கு நடந்த பாலியல் வன்முறை தொடர்பான வழக்கை விசாரிக்க, 3 பெண் ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. தேசிய மகளிர் ஆணையமும் தாமாக முன்வந்து மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.

இதுதொடர்பாக விசாரணை நடத்துவதற்கு 2 பேர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவை அமைத்து உத்தரவிட்டது. இந்தக் குழு இரண்டு நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், அதன் அறிக்கையை பிரதமரிடம் தாக்கல் செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. இதனிடையே, பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் மீது, ஏற்கனவே திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட 20 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொழிலதிபர் ஒருவரைக் கடத்திய வழக்கில் கைதான போட்டோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அருகே உள்ள பாக்கம் பகுதியில் உள்ள கிராமத்தில் ஞானசேகரன் வசித்தது தெரியவந்துள்ளது. அப்போது, கடந்த 2018 ஆம் ஆண்டில் பிரபல டைல்ஸ் கம்பெனி உரிமையாளர் ஒருவரை, தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து துப்பாக்கி முனையில் காரில் கடத்தியுள்ளார்.

பின்னர், அவரது குடும்பத்தினரிடம் 25 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டியுள்ளார். முதல் கட்டமாக 12 லட்சம் ரூபாய் பணத்துடன் இருந்த சூட்கேசை, ஞானசேகரன் கூறியது போன்று மதுராந்தகம் பாலத்தில் இருந்து அவர்கள் கீழே வீசி உள்ளனர். மேலும் 13 லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் தொழிலதிபரை விடுவோம் என்றும், இல்லையென்றால் அவரை தீர்த்துக் கட்டி விடுவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பான புகாரின் பேரில் காஞ்சிபுரம் மாவட்ட தனிப்படை போலீஸார், தொழிலதிபரின் உறவினர்கள் போன்று ஞானசேகரனுடன் செல்போனில் பேசியுள்ளனர். மேலும், மேல்மருவத்தூர் அருகே 13 லட்சத்தை வாங்கிக் கொள்ளும் படி கூறியுள்ளனர். அப்போது, திட்டமிட்டபடி மேல்மருவத்தூர் அருகே போலீசார் சுற்றுவளைத்ததும் ஞானசேகரன் தப்பியோடியுள்ளார். அவரது கூட்டாளிகள் சுரேஷ் மற்றும் முரளி ஆகியோர் போலீசிடம் வசமாகச் சிக்கியுள்ளனர்.

பின்னர் கொள்ளைச் சம்பவம் தொடர்பான வழக்கில் திண்டிவனம் போலீஸாரும், காஞ்சிபுரம் தனிப்படை போலீஸாரும் சேர்ந்து ஞானசேகரனைக் கைது செய்துள்ளனர். அதைத் தொடர்ந்து துப்பாக்கியுடன் ஞானசேகரன் மற்றும் அவரது கூட்டாளிகள் அமர்ந்திருக்கும் போட்டோ தான் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டு தொழிலதிபர் கடத்தல் வழக்கில் கைதான ஞானசேகரன், பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார்.

இதையடுத்து தான் கோட்டூர்புரம் பகுதியில் சாலையோர பிரியாணி கடை நடத்தியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் தான் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதாகியுள்ளார்.

திருட்டு, வழிப்பறி, ஆள் கடத்தல் உள்ளிட்ட வழக்குகளில் தொடர்புடைய குற்ற சரித்திர பதிவேடு குற்றவாளியான ஞானசேகரன் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்தால், பல குற்றச் சம்பவங்களைத் தடுத்திருக்கலாம் என எதிர்க்கட்சிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here