மாஸ்க் விமர்சனம் 

நாயகன் கவின் தனியார் துப்பறியும் நிபுணர் என்ற பெயரில் பலரை ஏமாற்றி பணம் சம்பாதித்து வருகிறார். அதேபோல் நாயகி ஆண்ட்ரியா பெண்கள் பாதுகாப்பு, சமூக ஆர்வலர் என்ற பெயரில் தவறான செயல்களை செய்து வருகிறார். இந்நிலையில் அரசியல்வாதியான பவன், தேர்தலுக்காக தொகுதி மக்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பல கோடி ரூபாய் பணத்தை ஆண்ட்ரியாவிடம் கொடுக்கிறார்.

அந்த பணத்தை ஆண்ட்ரியா தனக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட்டில் பதுக்கி வைக்கிறார். அந்த பணத்தை மாஸ்க் அணிந்த சிலர் கொள்ளை அடித்து விடுகிறார்கள். அந்த பணத்தை தேடும் பணியை ஆண்ட்ரியா கவினிடம் கொடுக்கிறார்.இறுதியில் கவின் அந்த பணத்தை கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதே கதை

தொழில்நுட்ப ரீதியாக, ஆர்.டி. ராஜசேகரின் ஒளிப்பதிவு படத்திற்குப் பெரும் பலம். அவருடைய ஷாட் ஃபிரேமிங் மற்றும் லைட்டிங், குறிப்பாக இரவு நேரக் காட்சிகளைப் பதிவு செய்த விதம் அட்டகாசம். ஜி.வி. பிரகாஷ் குமாரின் பின்னணி இசை, திரில்லர் காட்சிகளின் பதற்றத்தை ரசிகர்களுக்குக் கடத்த உதவியுள்ளது. ‘கண்ணுமுழி’ பாடல் வைரல் மெட்டிரீயல்.   

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கவின், எதார்த்தமாக நடிக்க முயற்சி செய்திருக்கிறார். இவரது நடிப்பில் மற்றொரு நடிகரின் சாயல் தெரிகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் கவனிக்கும்படியான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் ஆண்ட்ரியா, பார்வையிலேயே மிரட்டி இருக்கிறார். இவரது வில்லத்தனமான நடிப்பு படத்திற்கு பெரிய பலம்.

மற்றொரு நடிகை ஆக வரும் ருஹானி சர்மா அழகாக வந்து சென்று இருக்கிறார். அரசியல்வாதியாக நடித்திருக்கும் பவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார்.சார்லி, ரமேஷ் திலக், கல்லூரி வினோத், அர்ச்சனா சந்தோக், ரெடின் கிங்ஸ்லீ ஆகியோரின் நடிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

மைனஸ்: கதை அங்கும் இங்கும் தடுமாறுகிறது…. ஹீரோவை கிளைமேக்சில் ஜீரோவாக மாற்றிவிட்டனர்…..

மொத்தத்தில் இந்த ‘மாஸ்க்’ ஒருமுறை போடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here