கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தை அடுத்த எருமனூரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வருபவர் எடில் பட்த் பிலிப்ஸ். கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு அவரது வகுப்பில் பயின்று வந்த மாணவி ஒருவருக்கு பிலிப்ஸ் முத்தம் கொடுத்தது போன்ற ஒரு புகைப்படம் சமீபத்தில் சமூகவலைதளங்களில் வெளியானது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் பள்ளிக்கே சென்று தலைமை ஆசிரியரிடம் தகராறில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர் பிலிப்ஸ் எதுவும் சொல்லாமல் தலை குனிந்திருக்க, ஆத்திரமடைந்தவர்கள், அவரை அடித்து நிர்வாணபடுத்தினர்.
இது குறித்து காவல்துறைக்கும் தகவல் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் போலீசார் நேரில் சென்றனர். அங்கு எருமனூர் பொதுமக்களால் தர்ம அடிக்கு ஆளானவர், உள்ளாடையுடன் நின்றிருந்தார். இதையடுத்து பொதுமக்கள், மாணவியிடம் தவறாக முயன்ற ஆசிரியரை இப்படியே அரை நிர்வாணத்தோடு அழைத்துச் செல்லுமாறு அனுப்பி வைத்தனர்.
பின்னர் அவர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பயங்கர ஆத்திரத்துடன் காத்திருந்தனர். அப்போது சம்பந்தப்பட்ட மாணவி வந்து ஒரே கேள்வியைக் கேட்டு ஒட்டு மொத்த ஊர் மக்களையும் கிடுகிடுக்க வைத்தார்.
தலைமை ஆசிரியர் எடில் பட்த் பிலிப்சும், தானும் காதலித்து வந்ததாகவும், தன் அனுமதியுடனேயே அவர் முத்தம் கொடுத்ததாகவும் கூறி, யாரை கேட்டு அவரை கைது செய்கிறீர்கள்? இதற்கு என் அனுமதியை வாங்கியுள்ளீர்களா? என கேட்டவுடன் போலீசார் வெடவெடத்துப் போயினர்.
மாணவியின் வாக்குமூலத்தைக் கேட்டு அனைவரும் விரக்தியுடன் வீடு திரும்பியபோதும், சிறுமிக்கு முத்தம் கொடுத்த காரணத்தால் தலைமை ஆசிரியர் பிலிப்ஸ் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.