தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் அலுவலகம் மற்றும் மதுபான ஆலைகளில் நடத்திய சோதனையில் சுமார் ரூ. 1,000 கோடி ஊழல் நடந்திருப்பதாக அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. இந்த ஊழலை கண்டித்து சென்னை எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று மாநில பாஜக தலைவர் அண்ணாமலை அறிவித்திருந்தார்.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், தடையை மீறி போராட்டம் நடைபெறும் இடத்துக்கு செல்ல முயன்ற பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழிசை செளந்தரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன் உள்பட அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். டாஸ்மாக் தலைமை அலுவலகத்துக்கு வெளியே கூடிய பாஜக தொண்டர்களும் கைது செய்யப்பட்டு திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில், காவல்துறையினரின் கைது நடவடிக்கையை கண்டித்து அண்ணாமலை வெளியிட்ட எக்ஸ் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

“மாநில காவல்துறையை பயன்படுத்தி, பாஜகவின் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களைக் கைது செய்வதன் மூலம், ரூ. 1,000 கோடி மது ஊழலுக்கு எதிரான எங்கள் போராட்டத்தைத் தடுத்ததாக திமுக அரசு நினைத்துக் கொண்டிருக்கிறது. டாஸ்மாக் ஊழலில் முதல் குற்றவாளி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் என்பதை தமிழக மக்கள் அறிவார்கள். இந்த ஊழல் நிறைந்த திமுகவின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம். எவ்வளவு நாள்கள் எங்களைக் கைது செய்வீர்கள்? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here