மும்பையைச் சேர்ந்த நடிகையும் மாடலுமான காதம்பரி ஜெத்வானி. குஜராத்தை பூர்வீகமாகக் கொண்டவர் இவர், தற்போது மும்பையில் இவர்கள் குடும்பம் வசித்து வருகிறது. ‘சத்தா அடா’ என்ற பாலிவுட் படம் மூலமாக திரையுலகில் அறிமுகமான காதம்பரி, பாலிவுட் தவிர கன்னடம், தெலுங்கு, மலையாளம், பஞ்சாபி போன்ற படங்களிலும் நடித்துள்ளார். தமிழிலும் இவர் நடித்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள ‘செந்தட்டி காளை செவத்த காளை’ என்ற படம் இன்னும் ரிலீசாகவில்லை. இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு, ஆந்திர மாநிலத்தில் புதிய அரசு அமைந்த பிறகு புகார் ஒன்றை காதம்பரி கொடுத்திருந்தார்.

அந்தப் புகாரில், “மும்பையில் பிரபல தொழிலதிபர் ஒருவர் என்னை திருமணம் செய்வதாகக் கூறி என்னை பாலியல் வன்கொடுமை செய்தார். அவர் மீது மும்பையில் புகார் அளித்திருந்தேன். அந்த தொழிலதிபர் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு நெருக்கமானவர். ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக இருந்த சமயத்தில் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள அந்த தொழிலதிபர் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான குக்கல வித்யாசாகர் மூலம் ஆந்திராவில் என் மீது மோசடி வழக்குப் பதிவு செய்தார்.

அந்த வழக்கில் ஆந்திர டிசிபி விஷால் கன்னி தலைமையிலான காவலர்கள் மும்பைக்கு வந்து, என்னையும் என் குடும்பத்தினரையும் பயங்கரவாதிகளைப் போல விஜயவாடாவுக்கு அழைத்துச் சென்று சட்டவிரோதமாக விசாரணை என்ற பெயரில் எங்களை தடுப்பு காவலில் வைத்தனர். ஐபிஎஸ் அதிகாரியே என்னை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சித்ரவதை செய்தார். என் பெயரில் இருந்த ரூ.6 கோடி சொத்துக்களைப் பறித்ததோடு, எங்களை சிறையில் அடைத்தனர். 48 நாட்கள் கழித்து சிறையில் இருந்து வெளியே வந்தோம்.” என்று தெரிவித்திருந்தார்.

ஜெகன் ஆட்சியில் தங்களுக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி சந்திரபாபு நாயுடு ஆட்சியில் குற்றச்சாட்டு சுமத்திய நடிகை காதம்பரியின் புகாரை சந்திரபாபு நாயுடு அரசு ஏற்றுக்கொண்டது. இதற்கென ஒரு விசாரணைக் குழுவை அமைத்தது. இந்நிலையில் தான், நடிகை காதம்பரியைக் கைது செய்ய சட்டவிரோதமாக உத்தரவு பிறப்பித்தது அப்போது உளவுத்துறைத் தலைவராக இருந்த சீதாராம ஆஞ்சநேயுலு என்பது தெரியவந்தது.

அவர் எந்த குற்றச்சாட்டையும் பெறாமல், மற்ற இரு அதிகாரிகளுக்கு நடிகையைக் கைது செய்ய உத்தரவு பிறப்பித்திருக்கிறார். கைது செய்த இரு நாட்களுக்குப் பின்பே நடிகை மீது எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. விசாரணைக் குழுவின் விசாரணையில் இது அம்பலப்பட, தற்போது உளவுத்துறை முன்னாள் டிஜிபி ஆஞ்சநேயுலு, விஜயவாடா முன்னாள் காவல் ஆணையர் கிராந்தி ராணாடா, துணை ஆணையர் விஷால் கன்னி ஆகிய மூவரும் அதிரடியாக சஸ்பெண்ட்  செய்யப்பட்டுள்ளனர்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here