ராம் சக்ரி இயக்கத்தில் கெளதம் வாசுதேவ் மேனன், சமுத்திரக்கனி, லட்சுமி பிரியா சந்திரமௌலி, அபிநயா, கரண் சக்கரவர்த்தி (சிறுவன்) ஆகியோர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘கார்மேனி செல்வம்’

கார்மேனி செல்வம் விமர்சனம்:

கார் ஓட்டுநராகப் பணிபுரியும் நாயகன் சமுத்திரக்கனிக்கு, தன் குடும்பத்தை ஒரு ‘சொந்த வீட்டில்’ அமர வைக்க வேண்டும் என்பது தீராத ஆசை. இந்த ஒரு கனவு, அவரைத் திட்டமிடாத கடன் வலையில் தள்ளுகிறது. அவசரத்திற்கு கடன் வாங்க தொடங்கும் சமுத்திரக்கனி, அதையே தனது ஆசையை நிறைவேற்றுவதற்கான வழியாக மாற்றிக் கொள்ளும் போது, அவரை பெரும் சிக்கல் சூழ்ந்து கொள்கிறது. அதிலிருந்து மீண்டாரா? அவரது கனவு என்ன ஆனது? என்பதே கதை…

சமுத்திரக்கனி ஒரு சராசரி மனிதனின் தவிப்பை, குற்ற உணர்வை, இயலாமையை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார். குறிப்பாக, கடன் நெருக்கடியில் அவர் காட்டும் உடல் மொழி பாராட்டுக்குரியது. கெளதம் வாசுதேவ் மேனன், அவரது மனைவியாக நடித்திருக்கும் அபிநயா, சமுத்திரக்கனியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் கரண் சக்கரவர்த்தி ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரும் துணையாக பயணித்திருக்கிறார்கள். 

“கடன் ஒரு தற்காலிகத் தீர்வு, நிரந்தரச் சுமை” என்பதை உரக்கச் சொல்லாமல் உணர்த்திய விதம். வெளிநாட்டு வாழ் தொழிலாளர்களின் வலியை சொன்ன விதமும், குடும்பத்திற்காகப் பிரிந்து வாழும் மனிதர்களின் வலியை சொன்ன விதம்  இப்படத்திற்கு பலமாக அமைந்துள்ளன. ஜெகன்.ஆர்.வி மற்றும் தினேஷ்.எஸ் ஆகியோரின் படத்தொகுப்பும், சங்கரின் கலை இயக்கமும் படத்திற்கு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது.

மைனஸ்: விறுவிறுப்பு குறைவு…. இரண்டாம் பாதியின் கதையை இன்னும் சுருக்கி அழுத்தமாக சொல்லியிருக்கலாம்….

இந்த ‘கார்மேனி செல்வம்’ – சிறந்த வரவு செலவு கணக்கு பதிவு. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here