கோவையில் பூப்பெய்திய மாணவியை பள்ளி வகுப்பறைக்கு வெளியே அமர்ந்து தேர்வெழுதச் சொன்ன விவகாரம் தொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில்,

“தனியார் பள்ளி மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. பள்ளி முதல்வர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

குழந்தைகள் மீதான ஒடுக்குமுறை எவ்வகையாயினும் பொறுத்துக்கொள்ள முடியாது. அன்பு மாணவி தனியாக அமரவில்லை! நாங்கள் இருக்கிறோம். இருப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.

பள்ளி மாணவிக்கு நேர்ந்த அவலம்!

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா, செங்குட்டைப்பாளையம் கிராமத்தில் இயங்கி வரும் சுவாமி சித்பவானந்த மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவி சுருதிகா ஸ்ரீ, பூப்பெய்தியதால் வகுப்பறைக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவரை வகுப்பறைக்கு வெளியே வாயிலில் அமர்ந்து முழு ஆண்டுத் தேர்வு எழுதச் சொல்லியிருக்கின்றனர். இவர் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த திங்கள்கிழமை, நேற்று (புதன்கிழமை) என இரண்டு தேர்வுகளை வகுப்பறை வாயிலில் அமர்ந்து எழுதியுள்ளார்.

இந்நிலையில் மாணவியைப் பார்ப்பதற்காக வந்த அவரது தாய் மற்றும் உறவினர் சென்று மாணவியிடம் இதுதொடர்பாக பேசி விடியோ பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். தற்போது சமூக வலைத்தளங்களில் இந்த விடியோ வைரலாகி வரும் நிலையில், இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். அதன்படி இன்று காலை முதல், மாவட்ட கல்வி உதவி இயக்குநர் உள்பட அதிகாரிகள் பள்ளியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே பள்ளி முதல்வர் ஆனந்தியை பணியிடை நீக்கம் செய்து பள்ளியின் தாளாளர் உத்தரவிட்டுள்ளார். விடியோவில் பேசிய மாணவி, பள்ளியின் முதல்வர்தான் இங்கு அமர்ந்து தேர்வெழுதச் சொன்னதாகக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here