சென்னை கொளத்தூரைச் சேர்ந்தவர் ராஜசேகர் (45) லாரி ஓட்டுநரான இவருக்கு சித்ரா (42) என்ற மனைவியும், இரு பிள்ளைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த மாதம் 31ம் தேதி தீபாவளியன்று மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் படுத்து தூங்கி உள்ளார். பின்னர், அவர் நீண்ட நேரமாக கண் விழிக்கவில்லை. அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி கத்தி கூச்சலிட்டுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அங்கு திரண்ட அக்கம் பக்கத்தினர் உதவியுடன், ராஜசேகரை மீட்டு அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த மருத்துவர்கள் ராஜசேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தகவல் அறிந்து ராஜமங்கலம் காவல் நிலைய போலீஸார், ராஜசேகர் உடலை மீட்டு அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர், உடற்கூராய்வு முடிந்த உடன் உறவினர்களிடம் ராஜசேகர் உடல் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில், ராஜசேகரின் பிரேத பரிசோதனை அறிக்கை போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதில், அவரது கழுத்து எலும்பு முறிந்திருந்தது உறுதி செய்யப்பட்டது. எனவே, ராஜசேகர் மரணம் இயற்கையானது அல்ல. கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, அவரது மனைவி சித்ராவை காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர். அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். பின்னர், ராஜசேகர் ஓட்டி வந்த லாரியின் உரிமையாளர் செங்குன்றம் காமராஜர்நகரைச் சேர்ந்த தனசேகருடன் (39) சேர்த்து கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக் கொண்டுள்ளார். இதையடுத்து சித்ரா மற்றும் தனசேகரை போலீஸார் கைது செய்தனர்.

கொலை குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:

லாரி உரிமையாளர் தனசேகர், லாரி ஓட்டுநரான ராஜசேகர் வீட்டுக்கு அடிக்கடி வந்துள்ளார். அப்போது, சித்ராவுடன் கூடா நட்பு ஏற்பட்டுள்ளது. அடிக்கடி அவர்கள் தனிமையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் கணவர் ராஜசேகருக்கு தெரிந்து மனைவியை கண்டித்துள்ளார். ஆனால், சித்ரா அதை கண்டு கொள்ளவில்லையாம்.

இந்நிலையில், சம்பவத்தன்று மது அருந்தி வந்து ராஜசேகர் மனைவியிடம் இந்த விவகாரத்தை குறிப்பிட்டு தகராறு செய்துள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த சித்ரா தனசேகரை வரவழைத்து கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்து, பின்னர் அவர் மதுபோதையில் இறந்ததாக நாடகமாடி உள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கொலை சம்பவம் உறுதி செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட சித்ரா ஏற்கனவே திருமணமாகி, 2வதாக ராஜசேகரை மணந்து அவருடன் குடும்பம் நடத்தி உள்ளார்.  என்று விசாரணையில் தெரியவந்துள்ளது. 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here