புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 3 பேர் ஈடுபட்டதாக சிபிசிஐடி போலீஸார் புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அண்மையில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர். புகாரளித்த தரப்பினரையே குற்றம் சுமத்தும் விதமாக இருப்பதாகக் கூறி சிலர் எதிர்ப்பு தெரிவித்து, குற்றப்பத்திரிகையை ஏற்கக்கூடாதென வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், குற்றப்பத்திரிகை நகல் கோரி குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் தரப்பு வழக்கறிஞர்கள் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்தனர். இதற்கான பதில் மனு தாக்கல் செய்ய சிபிசிஐடி போலீஸார் அவகாசம் கோரியதையடுத்து விசாரணையை ஜன.29-க்கு நீதிபதி தள்ளி வைத்தார்.
இதேபோல, இந்த வழக்கில் புகார் அளித்த தரப்பினரும், குற்றம் சாட்டப்பட்டுள்ளோர் தரப்பினரும் பட்டியலின பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கு விசாரணையை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என சிபிசிஐடி போலீஸார் தரப்பிலும் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.