திருநெல்வேலி மாநகராட்சி உதவி பொறியாளர் லெனின் மற்றும் அவரது மனைவி மீது வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து குவித்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பாளையங்கோட்டை சாந்திநகர் 28-வது தெருவை சேர்ந்தவர் லெனின் (54). திருநெல்வேலி மாநகராட்சியில் உதவி பொறியாளராக கடந்த 1997-ம் ஆண்டு செப்டம்பர் 3-ம் தேதி முதல் லெனின் பணியாற்றுகிறார். இவரது மனைவி சாந்தகுமாரி கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பாளையங்கோட்டையிலுள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியையாக பணியாற்றுகிறார்.

இவர்கள் இருவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா விசாரணை நடத்தினார். இவர்களது சொத்து மதிப்பு 2018-ம் ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில் ரூ.73.04 லட்சமாக இருந்தது. 2024-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி இவர்களது சொத்து மதிப்பு ரூ.5.74 கோடியாக உயர்ந்துள்ளது விசாரணையில் தெரியவந்தது.

6 ஆண்டுகளில் இருவரது வருமானம் ரூ.2.41 கோடியாகவும், செலவு ரூ.98.96 லட்சமாகவும் இருந்த நிலையில் இவர்களது சொத்து மதிப்பு கணிசமாக உயர்ந்திருந்தது. வருமானத்துக்கு அதிகமாக ரூ.3.59 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் மதிப்பிட்டுள்ளனர். இதையடுத்து இருவர் மீதும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் 3 பிரிவுகளில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here