திருச்சி மாவட்டம் துறையூரைச் சேர்ந்தவர் விக்னேஷ்(32). பெயின்டர். இவரது மனைவி சுகன்யா (30). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், மீண்டும் கர்ப்பம் தரித்த சுகன்யா, பிரசவத்துக்காக கடந்த 11-ம் தேதி திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மறுநாள் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு துணையாக, அவரது உறவுப்பெண் பிரேமா இருந்துள்ளார். சுகன்யாவுக்கு பக்கத்து பெட்டில் இருந்த பெண் ஒருவர், பிரேமாவுடன் நட்புடன் பழகியுள்ளார். தனது பெயர் மீனாட்சி என்றும், 7 மாத கர்ப்பம் என்றும், ஹீமோகுளோபின் குறைபாடு காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் சுகன்யாவின் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதற்காக கொண்டு செல்வதாக கூறி, பிரேமாவிடம் இருந்து குழந்தையை வாங்கிச் சென்ற அந்தப் பெண், மீண்டும் வார்டுக்கு திரும்பி வரவில்லை. மருத்துவமனை வளாகத்தில் பல இடங்களில் தேடியும் மீனாட்சியையும், குழந்தையையும் காணாததால் அதிர்ச்சியடைந்த சுகன்யா, பிரேமா ஆகியோர், அரசு மருந்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக போலீஸார் விசாரித்தனர்.

















