நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த மூலக்கரை வில்லேஜ் பகுதியில் உள்ள பல்வேறு கடைகளில், கள்ள நோட்டுகள் புழக்கத்தில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே களத்தில் இறங்கிய அதிகாரிகள், புகார் அளித்த வியாபாரிகளிடம் இருந்து, கள்ள நோட்டுகளை வாங்கி ஆய்வுக்கு உட்படுத்தினர்.
500 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் அடித்து, கடைகளில் யாரோ கைமாற்றிவிட்டது அதில் உறுதியானது. மேலும், அத்தனை கள்ள நோட்டுகளிலும் ஒரே சீரியல் எண் இருந்துள்ளது. கிராமங்களில் இப்படி ஒரு மோசடி வேலையில் ஈடுபட்டது யார்? என அதிர்ச்சி அடைந்த போலீசார் ரூபாய் நோட்டை ஜெராக்ஸ் அடித்து மோசடி வேலையில் ஈடுபட்ட நபரைப் பிடிக்க தனிப்படை அமைத்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
 
அதில் மளிகை கடை ஒன்றில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், கள்ள நோட்டை நீட்டி மளிகைப் பொருட்களை வாங்கிய நபர் ஒருவர், மீதி சில்லறைக்கு ஒரிஜினல் நோட்டுகளாக வாங்கிச் சென்றது தெளிவாகப் பதிவாகி இருந்தது. சிசிடிவி காட்சிகளை ஊருக்குள் காட்டி விசாரிக்க இவரா? என ஷாக் ஆன ஊர் பெரியவர்கள், அதே கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரை கைகாட்டி உள்ளனர்.
 
உடனே முருகானந்தத்தின் வீட்டை சுற்றி வளைத்து, அதிரடி ரைடு நடத்தியதில் உள்ளே கள்ள நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் போட்டுக் கொண்டிருந்தவரை, கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அவரிடம் இருந்து 32 ஆயிரத்து 500 ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுக்க பயன்படுத்திய கம்ப்யூட்டர், பிரிண்டிங் மெஷின் உள்ளிட்ட உபகரணங்களை பறிமுதல் செய்தனர்.
 
மாதச் சம்பளம் சாப்பாட்டுக்கே பற்றவில்லை என ஏக்கத்திலிருந்த முருகானந்தம், யூடியூப்பைப் பார்த்து ரூபாய் நோட்டுகளை கலர் ஜெராக்ஸ் எடுத்து கடைகளில் கொடுத்து சில்லறை மாற்றி உள்ளார். வில்லேஜ் தானே, யாரும் கண்டுபிடிக்க மாட்டார்கள் என நினைத்து விடிய விடிய இவ்வேலையில் ஈடுபட்டுள்ளார். ஆனால், போலீசில் விசாரணையில் வசமாக சிக்க, விசாரணைக்குப் பின்னர் முருகானந்தத்தை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here