தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யக் கோரிய முதல்வர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையை ஏற்றதாக ஆளுநர் மாளிகை இரவு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமலாக்கத் துறை கைது செய்ததைத் தொடர்ந்து அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்தார். தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ள செந்தில் பாலாஜி மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.எம். நாசர் ஆகியோர் மீண்டும் அமைச்சர்களாக பதவியேற்கவுள்ளனர்.
அவர்களுடன், திருவிடைமருதூர் சட்டப்பேரவை உறுப்பினர் கோவி. செழியன் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டப்பேரவை உறுப்பினர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோரும் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பால்வளத் துறை அமைச்சர் டி. மனோ தங்கராஜ், சிறுபான்மைத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கே.ராமசந்திரன் ஆகியோர் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். முன்னாள் வனத் துறை அமைச்சர் கா. ராமசந்திரன், அரசு கொறடாவாக நியமிக்கப்பட்டுள்ளார்.