மதுரை ஆரப்பாளையம் மஞ்சள் மேட்டு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 29). ஆட்டோ டிரைவராக உள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். பார்த்திபனுக்கு பெண்கள் சபல புத்தி இருந்ததால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதன் காரணமாக பார்த்திபன் மனைவி அவரை பிரிந்து குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-2 மாணவி மீது பார்த்திபனுக்கு ஆசை ஏற்பட்டது. அவருடன் பேச முயன்றும் அந்த மாணவி பார்த்திபனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. ஆனாலும் அவர், மாணவியை பின் தொடர்ந்து சென்று அடிக்கடி காதல் தொந்தரவு கொடுத்து வந்தார்.

இது பற்றி அந்த சிறுமியின் தாய்க்கு தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பார்திபனை சந்தித்து கண்டித்தார். அப்போது பார்த்திபன், ‘நீங்களும் நானும் ஒரே சாதியை சேர்ந்தவர்கள். எனக்கு உங்கள் மகளை பிடித்துள்ளது. அவளை நான் திருமணம் செய்ய விரும்புகிறேன்’ என்று கூறினார்.

ஆனால் அதற்கு ‘உனக்கு ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். எனவே மனதில் தேவையற்ற ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே’ என்று மாணவியின் தாய் அறிவுரை கூறினார்.

ஆனாலும் பார்த்திபன் மாணவியை எப்படியும் அடைந்தே தீருவது என்பதில் உறுதியாக இருந்தார். சம்பவத்தன்று பார்த்திபன் நள்ளிரவில் மாணவி வீட்டுக்கு சென்றார். அந்த சமயம் மாணவி இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக வீட்டுக்கு வெளியே வந்தார். அங்கு மறைந்திருந்த பார்த்திபன் மாணவியை வலுக்கட்டாயமாக தூக்கி ஆட்டோவில் கடத்தி சென்றார்.

கப்பலூரில் உள்ள ஒரு வீட்டுக்கு மாணவியை அழைத்து சென்ற அவர், உல்லாசத்துக்கு வற்புறுத்தி உள்ளார். ஆனால் மாணவி அதற்கு உடன்படவில்லை.

‘நான் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன்’ என கூறி அவர் மாணவியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவர் திருமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று அங்கு வைத்தும் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது.

மகள் மாயமானது குறித்த மாணவியின் தாய் மதுரை தெற்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். இன்ஸ்பெக்டர் ஸ்டெல்லாபாய் வழக்குப்பதிவு செய்து ஆட்டோ டிரைவர் மற்றும் மாணவியை தேடி வந்தார்.

போலீசாரின் தேடுதல் வேட்டையில் திருமங்கலத்தில் பதுங்கியிருந்த பார்த்திபனை போலீசார் கைது செய்தனர். மாணவி மீட்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here