சென்னையில் திருமணமான நான்கே மாதத்தில் இளம் பெண் வரதட்சனை கொடுமையால் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கேரளாவில் 100 சவரன் நகை, ஒன்றரை ஏக்கர் நிலம், கார் போன்றவை போதாது எனக் கூறி இளம் பெண் மருத்துவரை அவரது கணவரும், மாமனார், மாமியாரும் கொடுமை படுத்தியதால், தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் நாடளவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

அரசியல் கட்சி தலைவர்கள் உட்பட பலரும் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாட்டிலும் இதுபோன்ற ஒரு சம்பவம் நிகழ்ந்தேறியிருக்கிறது. சென்னை கே.கே.நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவர் திருமணமான நான்கே மாதத்தில் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில், தற்கொலை செய்வதற்கு முன்பு இளம் பெண் கண்ணீருடன் கதறிய வீடியோவை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். 

சென்னை கே.கே.நகரை சேர்ந்தவர் ஜோதிஸ்ரீ. பட்டதாரியான இவருக்கும், திருமுல்லைவாயலை சேர்ந்த எலக்ட்ரீசியனான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணமானது முதலே கணவரும், மாமியாரும் ஜோதிஸ்ரீயிடன் வரதட்சனை கேட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

திருமணத்திற்கு பிறகு பாலமுருகன் கடன் பெற்று புதிய வீட்டு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த கடனை அடைக்க பிறந்த வீட்டில் இருந்து பணம் வாங்கி வரும் படி ஜோதிஸ்ரீயை டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் பாலமுருகனை விட்டு பிரிந்த ஜோதிஸ்ரீ தனது பெற்றோர் வீட்டில் தஞ்சம் அடைந்தார். 

கணவர் மனம் மாறியிருக்கக் கூடும் என்ற எண்ணத்தில் கடந்த ஏப்ரல் மாதம் ஜோதிஸ்ரீ மீண்டும் கணவர் வீட்டிற்கு சென்ற போது, அங்கிருந்த மாமியார் அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. கணவரை காண்பதற்காக வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு சென்ற ஜோதிஸ்ரீ காத்திருந்த போது, மாமியார் தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, அறையின் மின் வயரையும் துண்டித்துள்ளார். 

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ஜோதிஸ்ரீ தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பாக தனது செல்போனில் மாமியார் மற்றும் கணவரின் கொடுமைகளை கண்ணீர் மல்க வீடியோ எடுத்தும், கடிதம் மூலம் எழுதி வைத்தும் சென்றுள்ளார் ஜோதிஸ்ரீ. 

செல்போனில் இருந்த வீடியோக்களை அழித்த பாலமுருகன் மற்றும் அவரது வீட்டார், ஜோதிஸ்ரீ எதற்காக தற்கொலை செய்துக் கொண்டார் என்பது தெரியாதது போல் நடத்துள்ளனர். சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த ஆவடி காவல்துறையினர், ஜோதிஸ்ரீ இறந்த ஒரு மாதத்திற்கு பிறகு அவரது செல்போனில் அழிக்கப்பட்ட வீடியோவை மீண்டும் மீட்டுள்ளனர். 

வீடியோவில் ஜோதிஸ்ரீ தன்னுடைய தற்கொலைக்கு காரணமான கணவரையும் அவரது குடும்பத்தினரையும் விட வேண்டாம் என உருக்கமாக பதிவிட்டுள்ளார். அதனடிப்படையில் ஜோதிஸ்ரீயின் கணவர் பாலமுருகன், மாமியார், பாலமுருகனின் அண்ணன் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here