இயக்குனர் கிருஷ்ணன் இயக்கத்தில் போஸ் வெங்கட், கதிர், மியா ஸ்ரீ, இளவரசு, சங்கிலி முருகன், ஸ்ரீரஞ்சனி, சூசன், YSD சேகர், பசங்க சிவகுமார் ஆகியோர் நடித்துள்ள படம் தான் ‘பூர்வீகம்’
விமர்சனம்:
போஸ் வெங்கட் தனது மகன் கதிரை விவசாயத்தில் ஈடுபடுத்தாமல் நன்றாக படிக்க வைத்து, அரசு அதிகாரியாக்க ஆசைப்படுவதோடு, கிராமத்து சொந்தங்களை உதறிவிட்டு நகர வாழ்க்கையில் தனது மகனை ஈடுபடுத்த விரும்புகிறார். அவரது ஆசைப்படி, அவரது மகன் நன்றாக படித்து அரசு அதிகாரியாவதோடு, வசதியான வீட்டு பெண்ணை திருமணம் செய்துக் கொண்டு, சென்னையில் சொந்தமாக வீடு கட்டி வாழ்ந்து வருகிறார். தனது ஆசைப்படி தன் மகன் வாழ்க்கையில் உயர்ந்துவிட்டாலும், ஒரு தந்தையாக போஸ் வெங்கட்டினால் மகனின் மகிழ்ச்சியில் பங்கேற்க முடியாமல் போவதோடு, அவரிடம் உரிமையாக உறவாட முடியாத சூழலும் உருவாகிறது. இதை பார்த்து கதிரின் மன நிலை மாறியதா? இல்லையா? என்பதை கிராமத்து மண் வாசனையோடு கதை சொல்லுகிறது ….
விவசாயம் ஒவ்வொரு தலைமுறையிடம் இருந்து எப்படி? அழிக்கப்படுகிறது அதைக் காப்பாற்ற ஒவ்வொரு தலைமுறையும் எப்படி போராடுகிறார்கள். தன் தலைமுறை சங்கதி வளர்க்க பாடுபடும் ஒவ்வொரு பெற்றோர்களுக்கும் உரிதான கதை. தன் உடன் பிறந்த சகோதர சகோதரிகளின் சொந்தத்தையும் பந்தத்தையும் தவற விடுவதால் ஏற்படும் இழப்பினை இயக்குனர் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியுள்ளார். நமது அடுத்த தலைமுறை நம் கண் முன்னே தன் வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள் என்பதை சரியாகவும் தெளிவாகவும் இக்கதை விளக்குகிறது.
நாயகனின் தந்தையாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், நகர வாழ்க்கை மோகத்தால் மகனை படிக்க வைத்தாலும், அவர் தன்னிடம் இருந்து விலகும் போது அதை எதிர்கொள்ள முடியாமல் தவிக்கும் இடங்களில் கண்கலங்க வைத்துவிடுகிறார். கதிர் இரண்டு கதாபாத்திரங்களிலும் நடிப்பில் வேறுபாட்டை காட்டியிருப்பதோடு, தனது உணர்வுகளை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார். மியா ஸ்ரீ குடும்ப பாங்கான முகத்தோடும், எளிமையான அழகோடும் கிராமத்து பெண் வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். இசையமைப்பாளர் சாணக்யாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கிராமத்து மண் மணத்தோடு இனிமையாக இருக்கிறது.
இரண்டாம் பாதியில் கதையை கொஞ்சம் சுருக்கி இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.
மொத்தத்தில் இந்த ‘பூர்வீகம்’- கிராமத்து மண் வாசனை
RAJ KUMAR- CINEMA REPORTER