சென்னை அடுத்த பெரும்பாக்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதி அருகே பேருந்து நிறுத்த நிழற்குடை ஒன்று உள்ளது. அங்கே கடந்த சனிக்கிழமையன்று, துணியால் மூடப்பட்ட நிலையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்துள்ளார். பேருந்து நிறுத்தத்திற்கு வந்த பயணிகள், இரத்தம் வெளியேறிய நிலையில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கிடப்பதைக் கண்டு அதிர்ந்து போயினர். உடனே அருகில் உள்ள பெரும்பாக்கம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கொலையான அந்த நபர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? பேருந்து நிறுத்தத்தில் கொலை செய்து பயணிகள் அமருமிடத்தில் சடலத்தை மறைத்துச் சென்றது ஏன்? என பல்வேறு கோணங்களில் காவல்துறை விசாரணையைத் தொடங்கினர்.
5 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டதையடுத்து, உயிரிழந்தது வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலை செய்து வந்த பழனிச்சாமி என்பது தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் அம்பலமாகின. திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி கடந்த 20 வருடங்களுக்கு முன் சென்னைக்கு வந்து வீடுகளுக்கு சிலிண்டர் போடும் வேலையை செய்து வந்துள்ளார். 15 வருடங்களுக்கு முன்பு பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்த வீரலட்சுமி என்ற பெண்மணியுடன் பழக்கம் ஏற்பட்டு ஒன்றாக வாழ்ந்து வந்துள்ளனர். பழனிச்சாமி வீரலட்சுமி தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. வீரலட்சுமிக்கு ஏற்கனவே திருமணம் ஆகி கணவர் இறந்து விட்டார். அதேபோல் பழனிச்சாமிக்கும் ஏற்கெனவே ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்து பிரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் சென்னை செம்மஞ்சேரி சுனாமி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த அசோக்குமார் என்பவருடன் வீரலட்சுமிக்கு புதிதாக பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழனிச்சாமிக்கு விஷயம் தெரியவந்து வீரலட்சுமியை கடுமையாகக் கண்டித்துள்ளார். ஆனால் அதனை பொருட்படுத்தாத வீரலட்சுமி தனது பழக்கத்தை தொடர்ந்து வந்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தினமும் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ஒரு கட்டத்திற்கு மேல் பழனிச்சாமியின் டார்ச்சர் பொறுக்க முடியாத வீரலட்சுமி பெரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் இனிமேல் எனக்கும், வீரலட்சுமிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என பழனிச்சாமி கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து கடந்த ஆறு மாதமாக வீட்டிற்கு வராமல் இருந்த பழனிசாமி, கடந்த வெள்ளிக்கிழமையன்று வீரலட்சுமியை வீட்டிற்கு சென்று சந்தித்துள்ளார். செல்லும் போதே போதையில் இருந்த பழனிசாமி, வீரலட்சுமியுடன் சண்டையிட்டு மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறார். அப்போது வீரலட்சுமியின் முகத்தில் குத்தியதில் அவர் படுகாயமடைந்து மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பழனிசாமி கொலை குறித்து விசாரித்தபோது, கடைசியாக அன்று தான் அவரை பார்த்ததாக வீரலட்சுமி போலீசாரிடம் தெரிவித்திருந்தார். இதனால் யார் கொலை செய்தது என்பது புரியாமல் கடந்த 4 நாட்களாக போலீசார் திணறி வந்தனர்.
இந்நிலையில், வீரலட்சுமியின் செல்போன் எண்ணை ஆய்வு செய்த போது தான் அவருக்கு அசோக்குமாருடன் இருந்த தொடர்பு போலீசாருக்குத் தெரியவந்துள்ளது. அசோக்குமாரைப் பிடித்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்திய போது அவர் உண்மைகளை கக்கி விட்டார். சம்பவத்தன்று வீரலட்சுமியின் முகத்தில் குத்தி காயப்படுத்திய கோபத்தில், பழனிச்சாமியை கொலை செய்து விடுவது என்ற முடிவுக்கு வந்துள்ளார் அசோக். அதற்காக பழனிச்சாமியை தேடிச் சென்ற அவர், பேருந்து நிழற்குடையில் பழனிச்சாமி படுத்து உறங்கி கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.
உடனே அருகில் கிடந்த கல்லை எடுத்து அவரது தலை மீது இரண்டு முறை போட்டு கொடூரமாக கொலை செய்ததாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதையடுத்து, பழனிச்சாமியை கொலை செய்த அசோக்குமாரையும், கடைசி வரை போலீசாரிடம் உண்மையை மறைத்து தண்ணி காட்டி வந்த வீரலட்சுமியையும் போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

















