வீனஸ் இன்ஃபோடெயின்மென்ட் கே.ஜே.கணேஷ் தயாரிப்பில், பாலாஜி வேணுகோபால் இயக்கத்தில் குமரன், பவித்ரா, சுப்பையா பிள்ளை, வரதராஜன், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘குமார சம்பவம்’
விமர்சனம்
திரைப்பட இயக்குநராகும் முயற்சியில் இருக்கிறார், சென்னையை சேர்ந்த குமரன். தயாரிப்பாளரை தேடி ஓய்ந்து போன அவர், தனது பூர்வீக வீட்டை விற்று, படம் எடுக்க முடிவெடுக்கிறார். இந்த நேரத்தில் வீட்டின் முதல் மாடியில் வசிக்கும் சமூக செயற்பாட்டாளர் வரதராஜன் மர்மமாக இறந்து கிடக்கிறார். போலீஸ் விசாரணையில் குமரனும் சிக்குகிறார். வரதராஜனை கொன்றது யார்? குமரனின் சினிமா கனவு என்ன ஆனது? என்ற மர்மத்தை போலீஸ் விசாரணையின் வழியாக விறுவிறுப்பாகவும், நகைச்சுவையுடனும் சொல்லப்படுகிறது குமார சம்பவம் படத்தின் கதை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் நடித்த குமரன் தங்கராஜ், கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே நகைச்சுவை மற்றும் உணர்ச்சிபூர்வமான காட்சிகளில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென ஒரு பெயரைப் பெற்றுள்ளார். கதையின் அடித்தளமாக ஜி.எம். குமார், குமாரவேல் இருவரின் கதாபாத்திரம் அமைந்துள்ளது. கதையின் பிரதான கதாபாத்திரத்தில் தங்கள் அனுபவ நடிப்பால் இருவரும் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி நகைச்சுவை கலந்த துடிப்பான திரைக்கதைக்கு வலு சேர்த்துள்ளனர்.
சில இடங்களில் ‘சீரியல்’ உணர்வு வருவதையும் தவிர்க்க முடியவில்லை. இரண்டாம் பாதியில் சிபிஐ ஆபிசர் என வரும் வினோத் சாகரின் தொடர் காமெடி காட்சிகள் வயிற்றைப் பதம் பார்க்கின்றன. அவருடன் பாலசரவணனும் தன் பங்குக்கு , ஒன் லைன் கவுன்ட்டர்களில் ரசிக்க வைக்கிறார். அச்சு ராஜாமணியின் பின்னணி இசையும் ஜெகதீஷ் சுந்தரமுர்த்தியின் ஒளிப்பதிவும் ஒரு காமெடி படத்துக்கான ‘சம்பவத்தை’ செய்திருக்கின்றன. ஒரு சிம்பிளான மர்ம மிஸ்ட்ரி கதையை பேமிலி டிராமாவாக நகைச்சுவையுடன் கலகலப்பாகவும் நகரும்படி விறுவிறுப்பான காட்சிகளுடன் இயக்கியுள்ளார் பாலாஜி வேணுகோபால்.
மைனஸ்: படத்தொகுப்பில் கூடுதல் கவனம் தேவை…. பாடல்களிலும் கவனம் வேண்டும்…
மொத்தத்தில் இந்த ‘குமார சம்பவம்’ பார்த்தால் சிரித்து, சிரித்து வயிறு வலி நிச்சயம்.

















