2026 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். இதற்கு திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். சட்டப்பேரவைத் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் நேரடியாகப் போட்டியிடப் போவதில்லை என அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பின், செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சி மீண்டும் மலர வேண்டும் என்பதே தான் எடுத்திருக்கும் முடிவு என்று கூறினார். வெளியில் இருந்து திமுகவிற்கு அழுத்தமாக ஆதரவு கொடுப்போம் என்றும் தெரிவித்தார்.
முன்னதாக, திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளின் எண்ணிக்கை மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் பரிந்துரை ஆகியவற்றில் உடன்பாடு இல்லை என்று கமல் குறிப்பிட்டுள்ளார். மேலும், “நெருக்கடியான சூழலில் ‘எங்கே எங்கள் பங்கு’ என்று கேட்பது ஒரு நல்ல சகோதரனின் அடையாளமாக இருக்கமுடியாது. இது தியாகம் அல்ல; கடமை.” என்றும் கமல் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே, திமுக கூட்டணிக்கு கமல் நிபந்தனையற்ற ஆதரவு அளித்திருப்பதை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெகுவாகப் பாராட்டியுள்ளார். அதில், இது தியாகம் அல்ல, கடமை என கமல்ஹாசன் குறிப்பிட்டாலும், உண்மையில் இது ஒரு மிகப்பெரிய தியாகம் என ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார். தேர்தல் பரப்புரைக்காக கமல் தமிழ்நாடு முழுவதும் அவர் வலம் வர வேண்டும் எனவும் அன்பான வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதேபோல் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனும் கமல் முடிவுக்கு பாராட்டுத் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பான வலைதளப் பதிவில், “மக்கள் நீதி மய்யத்தின் நிறுவனரும் தலைவருமான அண்ணன் கமல்ஹாசனின் இந்த அதீத உணர்வு, மிகவும் ஆழமான, தொலைநோக்குப் பார்வையுள்ள அரசியல் புரிதலின் வெளிப்பாடாகும். நட்புறவில் சிறு கீறலும் ஏற்படாமல் நனிநாகரிகத்தோடு தனது கையறுநிலையை தெளிவுபடுத்தியுள்ள பாங்கு, அவரது அறிவுமுதிர்ச்சியையும் அதியுச்சப் பக்குவத்தையும் உறுதிப்படுத்துகிறது.
திமுக தலைமையிலான ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின்’ வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டு, துணிச்சலாக அவர் மேற்கொண்டுள்ள இந்த முடிவு அரசியல் வரலாற்றில் என்றென்றும் நிலைபெறக்கூடிய ஒன்றாகும். அரசியல் ஆதாயத்திற்காகவோ தான்தோன்றித்தனமாகவோ உணர்ச்சிவயப்பட்டுத் தாறுமாறாக வெடித்துச் சிதறாமல், ‘நாங்கள் போட்டியிட விரும்பவில்லை’ என்றும், திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றிக்குத் தீவிரமாகப் பணியாற்றுவோம்” என்றும், அண்ணன் கமல்ஹாசன் எடுத்துள்ள இந்த நிலைப்பாடு காலத்தால் போற்றப்படும் அரசியல் கண்ணியம் ஆகும். அவர்மீது மக்களிடையே நிலவும் அதியுயர் நன்மதிப்பு பன்மடங்கு பல்கிப் பெருகும்!” என்று குறிப்பிட்டு கமலைப் பாராட்டியிருக்கிறார் திருமாவளவன்.

















