தீவிரவாத தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரியாக விஜய் (எம்.எஸ். காந்தி). அவரின் மனைவியாக சினேகா, தன் மனைவிக்கு தான் செய்யும் தொழிலை ரகசியமாக வைக்கிறார் நம்ம காந்தி. இருவருக்கும் ஜீவன் என்கிற மகன் இருக்கிறார். இந்நிலையில் சினேகா மீண்டும் கர்ப்பமாகிறார். காந்தியின் சிறப்பு குழுவில் சுனில் தியாகராஜன்(பிரசாந்த்), கல்யாண் சுந்தரம்(பிரபுதேவா), அஜய்(அஜ்மல் அமீர்), அவர்களின் பாஸ் நஸீர்(ஜெயராம்) முன்னாள் தலைவராக மோகன் ஆகியோர் இருக்கிறார்கள்.
மோகன் பணத்திற்காக மோசடி செய்து மாட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேறியவர். அவரை கென்யாவில் வைத்து கொலை செய்கிறது விஜய் தலைமையிலான குழு. அடுத்த ஆபரேஷனுக்காக தாய்லாந்து செல்ல வேண்டும். கர்ப்பிணி மனைவி சினேகாவின் தொல்லை தாங்காமல் அவரையும், நான்கு வயது மகனையும் அழைத்துக் கொண்டு செல்கிறார். அங்கு நடந்த ஒரு எதிர் தாக்குதலில் கர்ப்பிணி சினேகாவை மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய சூழ்நிலை. அப்போது நான்கு வயது மகன் காணாமல் போகிறார்.
கடத்தியவர்களுடன் அந்த மகனும் விபத்தில் இறக்கிறான். 2008ல் நடந்த அந்த சம்பவத்திற்குப் பிறகு தற்போது 2024ல் விஜய், சினேகா பிரிந்து வாழ்கிறார்கள். மாஸ்கோவில் ஒரு வேலைக்காக சென்ற போது அங்கு தன்னைப் போல உள்ள ஒரு இளம் விஜய்யை சந்திக்கிறார். பிறகு என்ன நடந்தது என்பதே மீதி கதை…..
அப்பா காந்தி ஆக, மகன் ஜீவன் ஆக இரண்டு வேடங்களிலும் விஜய் தனது நடிப்பில் கவர்கிறார். பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் ஆகியோர் தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். யோகிபாபுவும், பிரேம்ஜியும் சிரிக்க வைக்கிறார்கள். ‘நீ பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே அவன் என் நண்பன்டா,’ என பிரசாந்த் சொல்லும் போது அரங்கத்தில் விசில் சத்தம் பறக்கிறது.
பாடல் பெரிய அளவில் இல்லை, விஜய், த்ரிஷா பாடல் காட்சி ஏமாற்றம் அடைய வைத்துவிட்டது. இரண்டாம் பாதியில் சில காட்சிகளில் லாஜிக் இல்லவே இல்லை….
கோட் – விஜய் ரசிகர்களுக்கு மட்டும் விருந்து

















