சென்னை ராயப்பேட்டை பூரம் பிரகாசம் ராவ் சாலையில் வசிக்கும் தொழிலதிபரான கேரள மாநிலம் கண்ணூர் பகுதியைச் சேர்ந்த ரஷீத் என்பவரது வீட்டில் ஹவாலா பணம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக வருமானவரித் துறை அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் அவருடைய வீட்டில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனை நடவடிக்கையில் என்ஐஏ அதிகாரிகளும் கைகோத்தனர்.
ரஷீத்தின் வீடு முழுவதும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. பின்னர் வீட்டின் வெளியே நிறுத்தப்பட்டிருந்த அவருடைய காரிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது, அந்த காரில் ரூ.9 கோடியே 48 லட்சம் அளவுக்கு 2 ஆயிரம் ரூபாய் டம்மி கரன்சி நோட்டு கட்டுக்கள் இருந்தது தெரியவந்தது. அந்த டம்மி நோட்டுக்களுடன் ரசீத் ராயப்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த விவகாரம் குறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் ராயப்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து ரஷீத்தை கைது செய்தனர். டம்மி நோட்டுகளை வைத்து இருந்ததன் பின்னணி குறித்து அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். ரஷீத் ஹவாலா பணப்பரிமாற்றம், சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டாரா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகளும் தனியாக புலன் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.