தமிழக எம்பிக்கள் குறித்து சர்ச்சை கருத்தை தெரிவித்தற்கு மீண்டும் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார். மக்களவையில் திங்கள்கிழமை தமிழக எம்பிக்கள் குறித்து பேசிய கருத்துக்கு இன்றைய மாநிலங்களவை விவாதத்தின்போது மன்னிப்பு கோரியுள்ளார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது அமர்வு மார்ச் 10 தொடங்கி நடைபெற்று வருகிறது.

கூட்டத்தில் புதிய தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் பேசினர். மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது என்று கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோர் தெரிவித்தனர். இதற்கு பதிலளித்து தர்மேந்திர பிரதான் பேசுகையில் திமுக எம்.பி.க்கள் நாகரீகமற்றவர்கள் என்று கூறினார்.

“திமுகவினர் அநாகரீகமானவர்கள், ஜனநாயகம் இல்லாதவர்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள். மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களிடம் அவர்கள் நேர்மையாக இல்லை” என்று பேசினார்.

இதற்கு திமுக எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் மத்திய அமைச்சருக்கு எதிராக முழக்கமிட்டனர். மத்திய அமைச்சர் பேசியது வருத்தமளிப்பதாக திமுக எம்.பி. கனிமொழி கூறினார்.

இதையடுத்து தான் பேசியது புண்படுத்தியிருந்தால் அதனை திரும்பப் பெற்றுக்கொள்வதாக மக்களவையில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். தர்மேந்திர பிரதானின் கருத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் நாவடக்கத்துடன் பேச வேண்டும் என்றும் தமிழக மக்களை அநாகரீக்கமற்றவர்கள் என்று தெரிவித்திருப்பதாக கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து, மத்திய அமைச்சருக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் கண்டனத்தை பதிவிட்ட நிலையில், திமுகவினர் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், மாநிலங்களவையில் நடைபெற்ற தேசிய கல்விக் கொள்கை மீதான விவாதத்தில் தர்மேந்திர பிரதான் பேசுகையில்:

எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தான் பேசியது யாரின் மனதையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்தார். மேலும், 100 முறைகூட மன்னிப்பு கேட்கத் தயாராக இருப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், “தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியையும் திணிக்க முயலவில்லை. பிரதமர் மோடி அரசு தமிழுக்கு எதிரானது அல்ல, தமிழை நானும் விரும்புகிறேன். தமிழ்நாட்டில் தமிழை படிப்போர் குறைந்து வருகின்றனர். மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கருத்தை பகிர விரும்புகிறேன். ஆந்திரத்தில் 10 மொழிகளை ஊக்கப்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here