சென்னை துறைமுகத்தில் ரூ.35 கோடி மதிப்பிலான பொருட்களை கன்டெய்னருடன் திருடிச் சென்றதாக 6 பேர் கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.
சென்னை மயிலாப்பூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்று சென்னை துறைமுகத்தில் சரக்குகளை கையாளும் பணியைச் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் மேலாளரான குரோம்பேட்டை, சரஸ்வதி புரத்தைச் சேர்ந்த பொன் இசக்கியப்பன் (46) என்பவர்துறைமுகம் காவல் நிலையத்தில் அண்மையில் புகார் ஒன்று அளித்தார்.
அதில், கடந்த 7-ம் தேதி வெளிநாட்டிலிருந்து சுமார் ரூ.35 கோடி மதிப்புள்ள 5,230 டெல் கையடக்க கணினிகள் அடங்கிய கன்டெய்னரை சென்னை துறைமுகத்தில் உள்ள யார்டில் இறக்கி வைத்தோம். மீண்டும் 11-ம் தேதி அந்த கன்டெய்னரை எடுப்பதற்காக துறைமுகத்துக்கு வந்து பார்த்தபோது, அதை யாரோ திருடிச் சென்றது தெரியவந்தது. இதில், தொடர்புடையவர்களை கைது செய்து, கன்டெய்னரை மீட்டுத் தர வேண்டும்”என புகாரில் தெரிவிக்கப் பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீஸார்வழக்குப் பதிந்து விசாரித் தனர். விசாரணையில், மேலாளர் பொன் இசக்கியப்பன் பணியாற்றி வரும் நிறுவனத்தைச் சேர்ந்த இளவரசன் என்பவர் தனது கூட்டாளி களுடன் சேர்ந்து கன்டெய் னரை யார்டிலிருந்து திருடிச் சென்றது தெரியவந்தது.
இது தொடர்பாக திண்டுக்கல் நிலக்கோட்டை முத்துராஜ் (46), திருவொற்றியூர் சத்தியமூர்த்தி நகர் ராஜேஷ்(39), அதே பகுதி நெப்போலியன் (46), சிவபாலன் (44), திருவள்ளூர் பால்ராஜ் (31), அதே பகுதி மணிகண்டன் (31) ஆகிய 6 பேரை போலீஸார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 5,207 கையடக்கக் கணினிகள் அடங்கிய கன்டெய்னர் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய டிரைலர் லாரி பறிமுதல் செய்யப்பட்டன. தலைமறைவாக உள்ளஇளவரசன் உட்பட 3 பேரைபோலீஸார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.