Friday, February 6, 2026
Blog

லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்

ந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கையாண்டிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகவிருக்கும் இந்த திரைப்படத்தின் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியீட்டு விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் புதன்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பத்திரிகையாளர்கள், ரசிகர்கள் மற்றும் படக் குழுவினருடன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் திரு. ஏ. எம். விக்ரமராஜா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு படத்தின் டைட்டிலை வெளியிட்டார்.

திரு. விக்ரமராஜா பேசுகையில், “லெஜெண்ட் சரவணனின் இரண்டாவது படத்தின் பெயர் வெளியிட்டு விழாவிற்கு வருகை தந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. நாடறிந்த தொழிலதிபர் சரவணன் என்பது அனைவருக்கும் தெரியும்.

தகப்பனார் ஒரு பிரபலமான நிறுவனத்தை ஸ்தாபித்து அதனை பிள்ளைகளின் கைகளில் கொடுக்கும் போது சில பிள்ளைகள் வெற்றி பெறுவதுண்டு, சில பிள்ளைகள் தோற்றுப் போவதுண்டு. ஆனால் இதற்கெல்லாம் மாற்றாக கடுமையாக உழைத்து ஆசியா கண்டத்திலேயே சிறந்த விற்பனையாளர் என்று உயர்ந்து கொண்டிருப்பவர் தான் மரியாதைக்குரிய சகோதரர் லெஜெண்ட் சரவணன். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். அவருடைய முதல் படத்தை நான் பார்த்திருக்கிறேன். மிக நன்றாக இருக்கும். அதுவும் வெற்றிப்படம் தான். ஆனால் இந்த படம் அதையும் தாண்டி சிறந்த மைல்கல் படமாக திகழும். இது வெற்றி பெறுவது நிச்சயம். இதை யாரும் தடுத்திட இயலாது. இந்த ‘லீடர் ‘ கட்டாயம் வெற்றி பெறுவார்.

இரண்டரை மணி நேர திரைப்படம் என்று சொன்னாலும் மக்களின் மன அழுத்தத்தை போக்குவதற்காக மக்கள் அதை பார்த்து ரசிக்கக்கூடிய வகையிலும், மன மகிழ்ச்சியோடு வரக்கூடிய சூழலிலும் இந்த படம் அமையவிருக்கிறது.
இந்த திரைப்படத்தை திட்டமிட்டு பணியாற்றி இரவு பகல் பாராது உழைத்திருக்கிறார்கள். இந்த படம் வெற்றி பெறும். இந்த விழாவில் எங்களையும் அழைத்து கௌரவப்படுத்தியதற்காக நன்றி. தமிழ்நாட்டின் கடைக்கோடியில் உள்ள ஒரு பெட்டிக்கடை நடத்தும் சாமானிய வணிகர்களை கௌரவப்படுத்தும் வகையில் இந்த மேடை அமைந்திருக்கிறது. ஆகவே இந்த நிகழ்ச்சி எங்களுடைய குடும்ப நிகழ்ச்சி. ஒவ்வொரு வணிகர்களும் தன்னுடைய வாழ்வாதாரத்திற்காக எப்படி கடுமையாக உழைத்து, முன்னேற வேண்டும் என்பது குறித்து தான் நாங்கள் சந்திக்கும் போதெல்லாம் சரவணன் அவர்கள் விவாதிப்பார்.

ஆன்லைன் வர்த்தகம், கார்ப்பரேட் கம்பெனிகள், இது போன்ற நிறுவனங்களால் சாமானிய வணிகர்கள் பாதிக்கப்படாமல் அவர்களை பாதுகாப்பதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை மேற்கொண்டு இருக்கிறீர்கள் என்பது குறித்து தான் பேசுவார். ஜிஎஸ்டி பிரச்சினையாக இருந்தாலும், உணவு பாதுகாப்பு துறை சட்டம் சம்பந்தமான விஷயமாக இருந்தாலும் சாமானிய வியாபாரிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிக அக்கறையுடன் விவாதிக்க கூடியவர். அவர்கள் மீது உள்ளன்போடு இருப்பவர்தான் லெஜெண்ட் சரவணன்.

லெஜெண்ட் சரவணன் நடித்திருக்கும் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த படம் வெளியான பிறகு உலகம் முழுவதும் சரவணனின் பெயர் கொடி கட்டி பறக்கும்,” என்றார்.

படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான் வைபோதா பேசுகையில், “ஒவ்வொரு இயக்குநரும் பல திரைப்படங்களை இயக்கியிருப்பார்கள். அதில் நாம் சிலவற்றை தவறவிட்டிருப்போம். அந்த வகையில் நான் ஒரு இயக்குநரின் இயக்கத்தில் வெளியான அனைத்து படங்களையும் பார்த்திருக்கிறேன் என்றால் அது இயக்குநர் ஆர் எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் வெளியான படங்களைத் தான். அவருடைய படங்களை பார்க்கும்போது எல்லா தரப்பினருக்கும் ஏற்றதாக இருக்கும். அவரிடம் எல்லா படங்களையும் என்டர்டெய்ன்மென்டாக வழங்கும் மேஜிக் இருக்கிறது. அந்த மேஜிக் இந்த படத்தில் இன்னும் பிரம்மாண்டமாக அமைந்திருக்கிறது. தமிழ் சினிமாவில் ரொம்ப நாளாக இத்தகைய ஜானரிலான படங்களை தவறவிட்டிருக்கிறோம். அதை லீடர் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களுக்காக உருவாக்கி இருக்கிறோம்.

நான் சரவணா ஸ்டோர்ஸின் விளம்பரப் படத்தில் பணியாற்றி இருக்கிறேன். லெஜெண்ட் நடிக்கும் படத்தில் பணியாற்றும்போது, என்னை சந்திக்கும் பலரும் சிறப்பான இசையை வழங்குங்கள் என்று உற்சாகப்படுத்தியுள்ளனர். அவருடைய படத்தை குடும்ப ரசிகர்கள் அனைவரும் திரண்டு வந்து பார்ப்பார்கள். அதனால் பாடலையும் பின்னணி இசையையும் சிறப்பாக உருவாக்குங்கள் என அன்பாக வேண்டுகோள் விடுத்தனர். அந்த வகையில் இந்த படத்தில் பணியாற்றியது மிக்க மகிழ்ச்சி. திங்க் மியூசிக் நிறுவனத்துடன் மீண்டும் இணைந்திருப்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனைய விஷயங்களைப் பற்றி தொடர்ந்து பேசுகிறேன். இந்த தருணம் மகிழ்ச்சியானதாக இருக்கிறது. அனைவருக்கும் நன்றி,” என்றார்.

இயக்குநர் R. S. துரை செந்தில்குமார் பேசுகையில், “இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் கிளிம்ப்ஸை பத்திரிக்கையாளர்களின் முன்னிலையில் வெளியிடுவோம் என தயாரிப்பாளரான சரவணன் சார் என்னிடம் சொன்னார். ஊடகங்கள் பிள்ளையார் சுழி மட்டுமல்ல, பிள்ளையாரே அவர்கள் தான். மக்கள் என்ற கடவுளை சந்திப்பதற்கு முன் பிள்ளையாரான பத்திரிகையாளர்களை நாங்கள் தற்போது சந்தித்திருக்கிறோம்.

2022ம் ஆண்டில் செப்டம்பர் மாதத்தில் இருந்து லெஜெண்ட் சரவணன் அவர்களை சந்தித்து பேச்சு வார்த்தையை தொடங்கினேன். 5, 6 மாதங்கள் கழித்து தான் இப்படத்திற்கான பணிகளை இறுதி செய்து தொடங்கினோம்.

அந்தத் தருணத்தில் அவரை சந்தித்து பேசும் போதெல்லாம் அவர் ஆசைக்காகத் தான் நடிக்க வந்திருக்கிறார் என்று தான் நான் முதலில் நினைத்திருந்தேன். ஆனால் அவருடனான தொடர் சந்திப்பில் அவரின் பேச்சு மூலம் சினிமாவை பற்றிய அனைத்து விஷயங்களை நுணுக்கமாக பார்க்கக் கூடியவர் அவர் என்பது தெரிந்தது. அதன் பிறகு தான் அவர் நடிக்க வந்தது ஆசையால் அல்ல என்பது புரிந்தது.

சாதாரணமாக அவருடனான சந்திப்பின்போது ஒருமுறை அவர் பகிர்ந்து கொண்ட விஷயம் என்னை ஆச்சரியப்படுத்தியது. அவர் ஐந்தாவதோ ஆறாவதோ படித்துக் கொண்டிருக்கும் போது சில இந்தி நடிகர்களின் போட்டோக்களை வீட்டில் ஒட்டி இருந்தாராம். அது தொடர்பாக அவரது அம்மா கேட்டபோது, ‘நான் இவர்களைப் போல் எதிர்காலத்தில் வரவேண்டும், வருவேன்” என்றாராம். அதன் பிறகு அவர் தன்னுடைய குடும்பத்திற்காகவும், கடமைகளுக்காகவும் கடுமையாக உழைத்து உச்சத்தை எட்டி இருக்கிறார். இருந்தாலும் அந்த சிறுவனுடைய ஆசையை, கனவை ஒரு இளைஞனாக- இளைஞர்களுக்கான உத்வேகத்துடன் இந்தப் படத்தை தயாரித்து நடித்திருக்கிறார். இது எனக்கு உண்மையிலேயே சிறந்த முன்னுதாரணமாக இருந்தது.

அவருடன் பழகிய இந்த இரண்டு ஆண்டுகளில் அவருடைய கடும் உழைப்பை நேரில் பார்த்து வியந்து இருக்கிறேன். அவரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். அவரிடம் உள்ள அசாத்தியமான துணிச்சலும் தன்னம்பிக்கையும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

படப்பிடிப்பு தளங்களில் அவருடனான அனுபவம் ஒவ்வொன்றும் மறக்க முடியாதது.
ஒவ்வொரு இயக்குநருக்கும் அல்டிமேட் கோல் என்னவென்றால், அவர் நினைத்ததை நினைத்த வகையில் உருவாக்கிட வேண்டும் என்பது தான். அதற்கு முழுமையான சுதந்திரமும், அனுமதியும் வழங்கும் தயாரிப்பாளர் தான் தேவை. அந்த வகையிலான ஒரு நல்ல தயாரிப்பாளராகவும், நான் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே கேட்டு செய்வதற்கு தயாராக இருக்கக்கூடிய நடிகராகவும் அவர் இருந்தார். அவரின் இந்த துணிச்சலை கண்டு தான் நான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன். இந்த படம் எங்களுக்கு மன நிறைவை அளித்திருக்கிறது. உங்களுடைய ஆதரவிற்காக ஆர்வத்துடன் காத்திருக்கிறோம். நன்றி,” என்றார்.

தயாரிப்பாளர் / நடிகர் லெஜண்ட் சரவணன் பேசுகையில், “லீடர்- இந்த படத்தின் டைட்டிலை பார்த்தவுடன் உங்கள் அனைவருக்கும் அரசியல் சார்ந்த படமா, அல்லது எந்த மாதிரி படம் என்ற கேள்வி வரும். இந்தப் படத்தில் அரசியல் சார்ந்த காட்சிகளோ, அரசியல் சார்ந்த வசனங்களோ ஒரு துளி கூட கிடையாது. இது முழுக்க முழுக்க ஒரு கமர்ஷியல் என்டர்டெய்னர் ஃபிலிம். தற்போது வெளியாகி இருக்கும் க்ளிம்ப்ஸ் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இருக்கும். இந்த படத்தின் எசன்ஸ் இதுதான். இதே போல் தான் படம் முழுவதும் இருக்கும்.

இந்தப் படத்தின் கதை என்னவென்றால் ஒரு அப்பாவியான அப்பாவும், பிள்ளையும் சந்தோஷமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். திடீரென்று அவர்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய கேங்க் நுழைந்து விடுவார்கள். அதற்குப் பிறகு நடக்கும் விஷயங்களை தான் என்னுடைய இயக்குநர் துரை செந்தில்குமார் அற்புதமாக திரைக்கதை அமைத்திருக்கிறார். இன்றைய தலைமுறையினருக்கு பிடித்தமான வகையில் திரைக்கதையை அமைத்திருக்கிறார். இதுதான் முக்கியமானது.

ஏனெனில் கதைகள் ஏராளமாக இருக்கும். ஆனால் திரைக்கதை அமைப்பது தான் சவாலானது. அந்த வகையில் இந்தப் படத்தில் முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை ஒவ்வொரு காட்சியிலும் இயக்குநர் துல்லியமாக செதுக்கி செதுக்கி உருவாக்கி இருக்கிறார்.

ஜிப்ரானின் பின்னணி இசை இந்தப் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதேபோல் படத்தின் கதையோட்டத்திற்கு தகுந்தாற்போல் பாடல்களுக்கும் அவர் இசையமைத்திருக்கிறார்.

இந்த படத்திற்காக தூத்துக்குடியில் 40 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினோம். அதன் பிறகு ஜார்ஜியா நாட்டில் 15 நாட்கள் படபிடிப்பு நடத்தினோம். ஜெய்ப்பூர், சென்னை , ஊட்டி ஆகிய இடங்களிலும் படப்பிடிப்பு நடத்தினோம்.‌ ஒவ்வொரு காட்சியிலும் ஒளிப்பதிவாளர் வெங்கடேஷ் அற்புதமாக பணியாற்றி இருக்கிறார்.

சமீபத்தில் வெளியான ‘டிராகன்’ மற்றும் ‘ஜனநாயகன்’ படங்களில் பணியாற்றிய எடிட்டர் பிரதீப் ராகவ் தான் இப்படத்திற்கும் எடிட்டராக பணியாற்றி இருக்கிறார். இந்த படத்திலும் அவர் நேர்த்தியாக பணியாற்றி இருக்கிறார் அவருக்கும் என் வாழ்த்துக்கள்.

கலை இயக்குநர் துரைராஜுக்கும் என் வாழ்த்துக்கள். படப்பிடிப்பு தளத்திற்கு சண்டை பயிற்சி இயக்குநர் மகேஷ் மேத்யூ வந்துவிட்டால் அந்தத் தளமே உற்சாகமடைந்திடும். அந்த அளவிற்கு உத்வேகத்துடன் பணியாற்றுவார்.

சிறிய வயதில் இருந்தே எனக்கு சினிமா மீது ஆர்வம் இருந்தது. என்னுடைய வீட்டில் உள்ள பிரிட்ஜில் ஒரு பக்கம் சல்மான் கான், ஒரு பக்கம் ஷாருக்கான் ஆகியோரின் புகைப்படங்களை ஒட்டி இருப்பேன்.‌ என் தாயிடம் என்றைக்காவது ஒரு நாள் இவர்களைப் போல் நான் ஸ்டார் ஆவேன் என சொல்லி இருக்கிறேன். இதைக் கேட்ட என் தாய் ‘சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு சென்று விடுவார்.‌

நான் என்னுடைய தந்தையார் மீது மிகுந்த பக்தியும், மரியாதையும் வைத்திருக்கிறேன். அதன் காரணமாக குடும்ப தொழிலில் ஈடுபட்டு, என்னுடைய தந்தையாருடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினேன். அதன் பிறகு என்னை நம்பி முழு பொறுப்பையும் வழங்கி விட்டார். நான் கடுமையாக உழைக்கத்தொடங்கினேன். என்னுடைய நிறுவனத்தில் காலையில் முதல் ஆளாக உள்ளே நுழைவேன். அனைவரும் சென்ற பிறகு கடைசி ஆளாக வெளியேறுவேன். ஆரம்பம் முதல் இன்று வரை இப்படித்தான் தொடர்கிறேன். இந்தப் படத்தின் படப்பிடிப்பிலும் இதைத்தான் கடைப்பிடித்தேன். படப்பிடிப்பு தளத்திற்கு முதல் ஆளாக செல்வேன். அங்கிருந்து கடைசி ஆளாக வெளியேறுவேன். நான் எந்த வேலையை செய்தாலும் அதில் முழு கவனத்துடன் அர்ப்பணிப்புடன் உழைப்பேன். இதுதான் என்னுடைய கேரக்டர்.

இன்றைக்கு ஒரு பக்கம் கன்டென்ட் உள்ள படங்கள் தான் வெற்றி பெறும் என்கிறார்கள். மறுபக்கம் மாஸான ஆக்ஷன் படங்கள்தான் வெற்றி பெறும் என்கிறார்கள். இந்த படத்தில் நல்ல கதையம்சமுள்ள கன்டென்ட்டும் இருக்கிறது. மாஸான ஆக்ஷன் எலிமெண்ட்டும் இருக்கிறது. இந்த திரைப்படம் எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

படத்தை பார்த்த நானும் எங்களுடைய படக் குழுவினரும் மகிழ்ச்சியாக இருக்கிறோம். அதே மகிழ்ச்சியும், சந்தோஷமும், மன நிறைவும் படத்தை பார்க்கும் ரசிகர்களுக்கும் கிடைக்கும் என நினைக்கிறேன்.

சினிமா என்பது ஒரு தனிநபரின் வெற்றி அல்ல. சினிமாவில் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். படத்தை திரையிடும் திரையரங்குகளிலும் பல ஆயிரம் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாக நான் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றியடைய வேண்டும் என நினைப்பேன்.

சினிமா துறை தற்போது கொஞ்சம் இறங்கு முகமாக இருக்கிறது. தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பு சற்று குறைந்திருக்கிறது. புதிதாக வருபவர்களுக்கும் வேலை வாய்ப்பு முழுமையாக கிடைப்பதில்லை. அதனால் தான் நான் எப்போதும் ஒவ்வொரு திரைப்படமும் வெற்றி அடைய வேண்டும் என நினைப்பேன். அதேபோல் பத்திரிகையாளர்களாகிய நீங்களும் இந்த சினிமாத்துறை வளர்ச்சி அடைவதற்கும், மீண்டும் எழுச்சி பெறுவதற்கும் உங்களாலான பங்களிப்பை தொடர்ந்து வழங்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.‌

இந்தப் படத்தின் முதல் சிங்கிள் பாடலை பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வெளியிடுகிறோம். அதைத்தொடர்ந்து மார்ச் மாதம் ஆறாம் தேதி இப்படத்திற்கான க்ளிம்ப்ஸ் வெளியிடுகிறோம்.

இந்த திரைப்படத்தை ஏப்ரல் மாதத்தில் வெளியிடுவதற்கான அனைத்து முயற்சிகளையும் செய்து கொண்டிருக்கிறோம். இதற்கு முன்னதாக பிரம்மாண்டமான முறையில் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெறும். அந்த விழாவில் இப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரும் கலந்து கொள்வார்கள்,” என்றார்.

தைப்பூச ஜோதி தரிசனம்! வடலூரே அதிர்ந்து போனது!!

டலூா் வள்ளலாா் சத்ய ஞானசபையில் தைப்பூச பெருவிழா ஜோதி தரிசனம் இன்று (பிப். 1) காலை 6 மணியளவில் நடைபெற்றது. திரையை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள், பக்தர்கள் தரிசனம் செய்தனர்.மேலும், காலை 10 மணி, பிற்பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாளான திங்கள்கிழமை (பிப். 2) காலை 5.30 மணி என 6 காலங்கள் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் நடைபெறவுள்ளது.

வடலூா் வள்ளலாா் சத்ய ஞான சபையில் 155-வது தைப்பூச பெருவிழா கொடியேற்றத்துடன் சனிக்கிழமை (ஜன.31) காலை தொடங்கியது. தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி, நேற்று காலை 7.30 மணியளவில் தருமசாலையிலும், மருதூர் மற்றும் நற்கருங்குழி வள்ளலாா் சந்நிதியிலும், காலை 10 மணியளவில் ஞானசபையிலும் சன்மாா்க்கக் கொடியேற்றம் நடைபெற்றது.

ஞானசபையில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் வள்ளலார் திருவுருவப் படம், சன்மார்க்க கொடி, அவர் பயன்படுத்திப் பொருட்கள் வைக்கப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டன. இதனைத் தொடர்ந்து இன்று காலை திரை விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது. வள்ளலாா் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாக திருமாளிகையில் வருகிற 3-ஆம் தேதி திருஅறை தரிசனம் நடைபெறவுள்ளது. தைப்பூசத்தையொட்டி கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வடலூரில் குவிந்து வருகின்றனர். வடலூரே அதிர்ந்து போனது!! 

மத்திய பட்ஜெட் 2026-27

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், தனிநபர் வருமான வரி விகிதங்களிலும், வரம்புகளிலும் எந்த மாற்றமும் இல்லை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அதேநேரத்தில், 2025 வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் என்று அவர் தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பட்ஜெட்டின்போது, ​​புதிய வரி விதிப்பு முறையின் கீழ் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று அறிவிக்கப்பட்டது. அத்துடன், ரூ.75,000 நிலையான கழிப்பைக் கணக்கில் கொண்டால், ரூ.12.75 லட்சம் வரை மொத்த வருமானம் பெறுவோருக்கு வருமான வரி எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பட்ஜெட்டில் வரி விதிப்பு மற்றும் சலுகைகளின் எதிரொலியாக விலை குறையும் பொருட்கள்:

  • 17 புற்றுநோய் மருந்துகள்

  • மின்சார வாகன பேட்டரிகள்

  • விளையாட்டு உபகரணங்கள்

  • சோலார் பேனல்கள்

  • ஸ்மார்ட் போன்கள்

  • தோல் உபகரணங்கள்

  • மைக்ரோவேவ் ஓவன்கள்

  • லித்தியம் பேட்டரி பாகங்கள்

  • சிவிலியன் பயிற்சி விமான பாகங்கள்

  • 7 உயிர்காக்கும் மருந்துகள்

  • நீரிழிவு தொடர்பான மருந்துகள்

  • வெளிநாட்டு சுற்றுப்பயணங்கள்

  • வெளிநாட்டு கல்வி

  • மதுபான கழிவுகள்

  • காலணி பாகங்கள் ஏற்றுமதி

  • மைக்ரோவேவ் ஓவன்

  • தோல் ஏற்றுமதி

எவற்றின் விலை அதிகமாகும்?

  • சிகரெட்

  • பீடி

  • பான் மசாலா

  • குட்கா

  • இரும்பு, நிலக்கரி, உப்பு போன்ற கனிமங்கள்

2026-27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்​களவை​யில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காலை 11 மணிக்கு தாக்கல் செய்தார். தொடர்ந்து 9-வது முறையாக பட்​ஜெட்டை தாக்கல் செய்த அவர் வெளியிட்ட அறிவிப்புகள்…

“12 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் பதவியேற்றதில் இருந்து ஸ்திரத்தன்மை, நிதி ஒழுக்கம், நீடித்த வளர்ச்சி, மிதமான பணவீக்கம் ஆகியவற்றைக் கொண்டதாக நாட்டின் பொருளாதாரப் பாதை வகைப்படுத்தப்பட்டுள்ளது. நிச்சயமற்ற மற்றும் இடையூறான காலங்களில்கூட நாங்கள் எடுத்த விவேகமான முடிவுகளின் விளைவால் பொருளாதாரம் முன்னேற்றப் பாதையில் உள்ளது” என்று பட்ஜெட் உரையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளார்.

 

நிர்மலா சீதாராமன்:

பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்தவும் நிலைநிறுத்தவும், ஆறு விஷயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பதை நான் முன்மொழிகிறேன். அவை:

  1. ஏழு முக்கியத் துறைகளில் உற்பத்தியை அதிகரித்தல்

  2. பாரம்பரிய தொழில் துறைகளுக்கு புத்துயிர் ஊட்டுதல்

  3. வெற்றிகரமான சிறு, குறு, நடுத்தர தொழில்களை (MSME) உருவாக்குதல்

  4. உள்கட்டமைப்பை மேலும் வலுப்படுத்துதல்

  5. நீண்டகால பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தல்

  6. நகர பொருளாதாரப் பகுதிகளை உருவாக்குதல்

தை பூசம்: பக்தர்கள் அரோகரா… முழக்கம்!

தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். சூரபத்மனை வதம் செய்வதற்கு முருகப்பெருமான் வேல் வாங்கிய விழாவாக இந்த விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தைப்பூசத்திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது.

தொடர்ந்து சுவாமி அஸ்திரதேவர் கடலில் நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று மதியம் உச்சிக்கால தீபாராதனை முடிந்த பிறகு சுவாமி அலைவாயுகந்தபெருமான் வடக்குரதவீதியில் உள்ள தைப்பூச மண்டபத்திற்கு சென்று, அங்கு வைத்து சுவாமிக்கு அபிஷேக, அலங்காரமாகி, தொடர்ந்து சுவாமி தனி தங்க மயில் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தவாறு திருக்கோயில் சேர்கிறார்.

புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டம்! 7050 நபர்கள் பங்கேற்பு!!

சென்னை:
 
காவேரி மருத்துவமனை,  4-வது பதிப்பாக நடத்திய ‘K10K’ புற்றுநோய் விழிப்புணர்வு ஓட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சமூக நலன் மீதான தங்களது ஆதரவையும், அக்கறையையும் வெளிப்படுத்தினர். புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, ஆரம்பகட்டப் பரிசோதனையின் முக்கியத்துவம் மற்றும் நோய் தடுப்பு முறைகளை பொதுமக்களிடம் கொண்டு செல்லும் ஒரு முக்கிய தளமாக இருக்கும் இந்நிகழ்வு, ஒவ்வொரு ஆண்டும் மக்களின் பேராதரவோடு வளர்ச்சியடைந்து வருகிறது. 
 
5 கி.மீ மற்றும் 10 கி.மீ என இரண்டு பிரிவுகளாக நடைபெற்ற இந்த ஓட்டத்தில் உடற்தகுதி குழுக்கள், குடும்பத்தினர், மாணவர்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவன ஊழியர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இவர்களின் உற்சாகமான பங்கேற்பு, புற்றுநோய் விழிப்புணர்வு மற்றும் குறித்த காலஅளவுகளில் உடல்நலப் பரிசோதனைகளை தவறாமல் செய்து கொள்வது குறித்து இந்நகர மக்களிடையே அதிகரித்து வரும் ஏற்பட்டுள்ள ஆர்வத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.
 
10 கி.மீ ஓட்டம்: தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு. மா. சுப்பிரமணியன் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 
 
5 கி.மீ ஓட்டம்: காவல்துறையின் சென்னை தெற்கு போக்குவரத்து பிரிவு இணை ஆணையர் திரு. விஜயகுமார் ஐ.பி.எஸ் (IPS) அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
 
 
காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் செயல் இயக்குனர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் பேசுகையில்: “கடந்த நான்கு ஆண்டுகளில் ‘K10K’ ஓட்டம் இம்மாநகரில் மாபெரும் மக்கள் இயக்கமாக வளர்ந்துள்ளது. இன்று நாம் காணும் இந்த வலுவான பங்கேற்பு, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் நோய் தடுப்பு குறித்த சமூகத்தின் அக்கறையை காட்டுகிறது. இந்த முயற்சிக்கு ஆதரவளித்த சென்னை மக்களுக்கும், தன்னார்வலர்களுக்கும் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். சென்னை மக்களின் வரவேற்பும், ஆதரவும் எங்களை இன்னும் தீவிரமாக இந்த குறிக்கோளை நோக்கி பயணிக்க ஊக்கமளித்திருக்கிறது.”  என்று கூறினார்.
 
4-வது ஆண்டாக இப்போது நடைபெற்ற K10K ஓட்ட நிகழ்வில் 7000-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டனர். இது புற்றுநோய் விழிப்புணர்வு, நோய் வரும்முன் தடுப்பு மற்றும் ஆரம்பகட்ட பரிசோதனை ஆகியவற்றை வலியுறுத்துவதில்  சமூகத்தின் கூட்டு முயற்சியை பறைசாற்றுகிறது. 10 கி.மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு பல்வேறு வயது பிரிவு மற்றும் பாலின வகையினங்களில் கீழ் பரிசுகள் வழங்கப்பட்டன. 5 கி.மீ வகையினத்தின் கீழ், முதன்முறையாக பங்கேற்று ஓடியவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டனர். K10K புற்றுநோய் விழிப்புணர்வைப் பரப்புவதிலும், நீண்டகால ஆரோக்கியத்தைப் பேணுவதிலும் சமூகத்தின் கூட்டு நடவடிக்கை எவ்வளவு முக்கியம் என்பதை இந்த நிகழ்வு வலுவாக நினைவூட்டுகிறது.

கிழிந்த நிலையில் இருக்கும் PVR தியேட்டர் இருக்கைகள்!

சென்னை, E.A மாலில் உள்ள அனைத்து PVR ESCAPE தியேட்டர்களிலும் முன் வரிசை அதாவது பட்ஜெட் டிக்கெட் இருக்கைகள் அனைத்தும் கிழிந்த நிலையிலும், உடைந்த நிலையிலும், உடைந்து கீழே தொங்கிய நிலையிலும் இருக்கின்றன. பார்வையாளர்கள் E.A PVR ESCAPE மேலாளரிடம் பல முறை புகார் அளித்தும் தற்போது வரை இருக்கைகள் மாற்றப்படவில்லை என வேதனை தெரிவிக்கின்றனர்.
 
 
 

இதன் டிக்கெட் விலையாக ரூ54.35 மற்றும் ஆன்லைன் புக்கிங் கட்டணமாக ரூ16.52 ஆக மொத்தம் 70.87ரூ க்கு விற்பனை செய்து வரும் பி.வீ.ஆர் அமரும் இருக்கைகளை இப்படி வைத்திருப்பது சரியா? பி.வீ.ஆர் மேலாளர்கள் ஆய்வு செய்வதில்லையா? இதே நிலை தொடர்ந்தால் பி.வீ.ஆர் தியேட்டருக்கு நம்பி வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறை அதிக வாய்ப்பு இருக்கிறது. PVR கிழிந்த இருக்கைகளை மாற்றி தனது பெயரை தக்க வைத்து கொள்ளுமா? அல்லது பட்ஜெட் டிக்கெட் தானே என்று கண்டு கொள்ளாமல் இருக்குமா? என்று பார்ப்போம்.

– எமது நிருபர்

 

விமான விபத்து! அஜீத் பவாருக்கு அரசு மரியாதை!!

மும்பையில் இருந்து பாராமதிக்கு, மகாராஷ்டிர துணை முதல்வரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவருமான அஜீத் பவார் சென்ற தனி விமானம் புதன்கிழமை காலை தரையிறங்கும் போது விபத்தில் சிக்கியது. 

இந்த விபத்தில், விமானத்தில் பயணித்த அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ள நிலையில் அஜீத் பவாரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் இறுதிச் சடங்கு பாரமதியில் வியாழக்கிழமை காலை 11 மணிக்கு அரசு மரியாதையுடன் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் உள்ளிட்டோர் பங்கேற்பதாகக் கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அஜீத் பவாரின் மறைவுக்கு மகாராஷ்டிர மாநிலம் முழுவதும் 3 நாள்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

லஞ்சம் வாங்கிய உதவியாளர்! சிக்கியது எப்படி?!

நீலகிரி மாவட்டம், குன்னூா் நகராட்சி ஆணையராக இளம்பரிதி என்பவா் கடந்த 2024-ஆம் ஆண்டு பொறுப்பேற்றுக்கொண்டாா். நகராட்சியாக தரம் உயா்த்தப்பட்ட கோத்தகிரிக்கும் கூடுதல் பொறுப்பாக நகராட்சி ஆணையராகப் பணியாற்றி வருகிறாா்.

இந்நிலையில், கோத்தகிரியில் மாா்க்கெட் பகுதியில் இருசக்கர வாகன உதிரி பாக விற்பனைக் கடை நடத்திவரும் ரமேஷ் என்பவா் தன்னுடைய பழைய கட்டடத்தை இடித்துவிட்டு 2500 சதுர அடியில் புதிதாக கட்டடம் கட்ட விண்ணப்பித்து டிடிசிபி அனுமதி வாங்கியுள்ளாா். இதைத் தொடா்ந்து, கோத்தகிரி நகராட்சியில் அனுமதி வாங்க ஆணையா் இளம்பரிதியை அணுகியபோது, அவா் ரூ 6 லட்சம் லஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

அவ்வளவு தொகை தன்னிடம் இல்லை என ரமேஷ் கூறியதைடுத்து, ரூ.5 லட்சம் கொடுத்தால் வேலையை முடித்து தருகிறேன். அதில் முதற்கட்டமாக ரூ.2 லட்சம் கொடுத்தால் கட்டட அனுமதிக்கான பணிகளைத் தொடங்கிவிடுகிறேன் என இளம்பரிதி கூறியுள்ளாா். லஞ்சம் கொடுக்க விரும்பாத ரமேஷ் இது குறித்து லஞ்ச ஒழிப்புத் துறையில் புகாா் அளித்துள்ளாா். அவா்களது ஆலோசனையின்பேரில், ரசாயனம் தடவிய ரூ.2 லட்சம் ரொக்கத்தை இளம்பரிதியிடம் வழங்க அவரது அலுவலகத்துக்கு ரமேஷ் வந்துள்ளாா்.

அப்போது, நகராட்சி உதவியாளா் விக்னேஷ் என்பவா் ரமேஷிடமிருந்து பணத்தை வாங்கி ஆணையா் இளம்பரிதியிடம் கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸாா், அவா்களை கையும் களவுமாகப் பிடித்தனா். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத் துறை காவல் துணை கண்காணிப்பாளா் ஜெயகுமாா், ஆய்வாளா் சண்முக வடிவு தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, இருவரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்த பணத்தை பறிமுதல் செய்தனா்.

அரசு பணி நியமன ஆணை! எப்போது தெரியுமா?!

தமிழக அரசின் பல்​வேறு துறை​களுக்கு தேவைப்​படும் ஊழியர்​களும், அலு​வலர்​களும் தமிழ்​நாடு அரசு பணி​யாளர் தேர்​வாணை​யத்​தின் (டிஎன்​பிஎஸ்​சி) மூல​மாக​வும், அரசு பள்ளி ஆசிரியர்​கள் ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் வாயி​லாக​வும், அரசு மருத்​து​வர்​கள், நர்​சுகள் மற்​றும் மருத்​து​வப் பணி​யாளர்​கள், மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரி​யம் (எம்​ஆர்​பி) மூல​மாக​வும் தேர்வு செய்​யப்​படு​கின்​றனர். 

குரூப்-4 மூலம் 5,307 பேர் இந்​நிலை​யில், அனைத்து துறை​களின் செயலர்​களுக்கு மனிதவள மேம்​பாட்​டுத் துறை செயலர் சி.சமயமூர்த்தி அனுப்​பி​யுள்ள ஓர் உத்​தர​வில் கூறி​யிருப்​ப​தாவது: டிஎன்​பிஎஸ்சி குருப்-4 தேர்வு மூல​மாக பல்​வேறு துறை​களுக்கு 5,307 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

மருத்​து​வப் பணி​யாளர் தேர்வு வாரியம் வாயி​லாக மருத்​து​வர்​களும், மருத்​து​வப் பணி​யாளர்​களும், ஆசிரியர் தேர்வு வாரி​யம் மூலம் ஆசிரியர்​களும் தேர்வு செய்​யப்​பட்டு வரு​கின்​றனர். புதிய பணியாளர்களுக்கு பிப்​ர​வரி முதல் வாரத்​தில் தமிழக முதல்​வர் மூலம் பணி நியமன ஆணைகளை வழங்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 

எனவே, டிஎன்​பிஎஸ்​சி, டிஆர்​பி, எம்​ஆர்பி ஆகிய தேர்வு வாரி​யங்​கள் மூலம் தேர்வு செய் ​யப்​பட்​ட​வர்​களுக்கு பணி நியமன ஆணைகளை தயா​ராக வைத்​திருக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட துறைத் தலை​வர்​கள் மற்​றும் பணி நியமன அலு​வலர்​களுக்கு செயலர்​கள் உரிய அறி​வுரை வழங்க வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது

டிஎன்​பிஎஸ்சி மூலம் 5,307 பேர், டிஆர்பி மூலம் 1,700 முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர்​கள் மற்​றும் உடற்​கல்வி இயக்​குநர்​கள், எம்​ஆர்பி வாயி​லாக ஏறத்​தாழ 3 ஆயிரம் மருத்​து​வப் பணி​யாளர்​கள் என 10 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் அரசு பணி​களுக்கு தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். இவர்​கள் அனை​வருக்​கும் சென்​னை​யில் பிப்​ர​வரி முதல் வாரத்​தில் நடை​பெறும் பிரம்​மாண்ட விழா​வில் பணி நியமன ஆணைகளை முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் வழங்க உள்​ளார்.

சூடு பிடித்த ‘ஜனநாயகன்’

ஜனநாயகன் படத்துக்கு சான்று வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக சென்சார் போர்டு தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில், தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா ம்ற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு பிறப்பித்த உத்தரவில், அந்நிய சக்திகள் நாட்டில் மதப் பிரச்சினையை உருவாக்கும் வகையிலும், மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் வகையிலும், ராணுவம் சம்பந்தப்பட்ட காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக புகாரில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த புகார் தீவிரமானது.

படத்தை திரையிட அனுமதிக்கும் முன், இதை தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டும் என்பதால், படம் மறு ஆய்வு குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சென்சார் போர்டுக்கு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்காதது தவறு. படத்தை மறு ஆய்வுக்கு அனுப்புவது குறித்த முடிவு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்ட போதிலும், அந்த முடிவுக்கு எதிராக கோரிக்கை வைக்காமல் பட நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல. கோரிக்கை வைக்காத நிலையில் முடிவை ரத்து செய்து உத்தரவு பிறப்பிக்க முடியாது எனவும் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.