தமிழக வெற்றிக் கழகம் சார்பில் விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அருகே செப்டம்பர் 23-ஆம் தேதி மாநில மாநாடு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டிருந்த நிலையில், 21 கேள்விகளுக்குப் பதிலளிக்கக் கோரி கட்சியின் பொதுச்செயலர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை சார்பில் திங்கள்கிழமை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில், ஆகஸ்ட் 22-ஆம் தேதி கட்சிக் கொடியையும், கொடிப் பாடலையும் அறிமுகம் செய்து வைத்து பேசினார். அப்போது கட்சியின் முதல் மாநாடு விரைவில் நடத்தப்படும், அதற்கான விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த் மற்றும் கட்சி நிர்வாகிகள், ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட கூடுதல் எஸ்.பி. வி.வி. திருமாலையும், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதியையும் அவர்களது அலுவலகத்தில் சந்தித்து, செப்டம்பர் 23 -ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வட்டம், வி.சாலை பகுதியில் கட்சியின் மாநில மாநாட்டை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும், அதற்கான அனுமதி மற்றும் பாதுகாப்பை வழங்கக் கோரியும் மனு அளித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து ஆகஸ்ட் 28-ஆம் தேதி மாலையில் வி.சாலை பகுதிக்குச் சென்ற கூடுதல் எஸ்.பி. திருமால், மாநாடு நடைபெறுவதற்குத் தேர்வு செய்யப்பட்ட இடத்தை பார்வையிட்டார். இதன் தொடர்ச்சியாக, தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்துக்கு 21 கேள்விகளைப் பட்டியலிட்டு, அதற்கு 5 நாள்களுக்குள் பதிலளிக்குமாறு அறிவுறுத்தி விழுப்புரம் டி.எஸ்.பி. சுரேஷ் கடிதம் அனுப்பியுள்ளார்.
கேள்விகள் விவரம் வருமாறு:
1. மாநாடு நடைபெறும் நேரம் குறிப்பிடப்படவில்லை. எனவே மாநாடு எந்த நேரம் தொடங்கி எந்த நேரம் முடிக்கப்படும்.
2. மாநாட்டின் நிகழ்ச்சி நிரல் விவரம்.
3. மாநாடு நடத்த திட்டமிப்பட்டுள்ள இடத்தின் உரிமையாளர்கள் யார், அவர்களிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா?
4. மாநாட்டில் கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் விவரம்.
5. மாநாட்டு மேடையின் அளவு என்ன, எத்தனை நாற்காலிகள் மேடையில் போடப்படவுள்ளன, மேடையில் பேசவிருக்கும் முக்கிய நபர்களின் விவரம்.
6. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு எவ்வளவு நாற்காலிகள் போடப்படவுள்ளன.
7. மாநாட்டில் வைக்கப்படவுள்ள பேனர்களின் எண்ணிக்கை, அலங்கார வளைவுகளின் விவரம்.
8. மாநாடு ஏற்பாடு செய்யும் நபர்கள் மற்றும் பந்தல், ஒலிபெருக்கி மற்றும் இதர ஒப்பந்தாரர்கள் விவரம்.
9. மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள், அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம்.
10. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்கள் எந்தெந்த மாவட்டத்திலிருந்து வருவார்கள், யாருடைய தலைமையில் வருவார்கள், அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விவரம் மற்றும் அவர்கள் வரும் வாகனங்களின் வகை மற்றும் எண்ணிக்கை (இரு சக்கர வாகனங்கள், கார்கள், வேன்கள் மற்றும் பேருந்துகளின் விவரம்).
11.மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா, அந்த இடத்தின் உரிமையாளர் யார், அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா?
12. மாநாட்டில் வாகனங்கள் நிறுத்துமிடங்களில் பாதுகாப்புப் பணிக்கு தனியார் பாதுகாவலர்கள் அல்லது தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்படுவார்களா, அவர்களின் பெயர் விவரம், சீருடை விவரம்.
13. மாநாட்டில் கலந்து கொள்ளும் பெண்கள், குழந்தை மற்றும் முதியவர்களுக்கு செய்யப்படவுள்ள பாதுகாப்பு வசதிகள் விவரம்.
14. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு செய்யப்படவுள்ள அடிப்படை வசதிகளின் விவரம் மற்றும் வழங்கப்படும் குடிதண்ணீர் பாட்டில்வகையா அல்லது தண்ணீர் தொட்டி மூலமாகவா, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட இதர வசதிகள்.
15. மாநாட்டுக்கு வரும் நபர்களுக்கு உணவுப் பொட்டலங்கள் மூலம் விநியோகிக்கப்படவுள்ளதா அல்லது மாநாடு நடைபெறும் இடத்தின் அருகே சமையல்கூடம் மூலம் சமைத்து விநியோகிக்கப்படவுள்ளதா.
16. மாநாட்டில் தீ விபத்தை தவிர்க்கும் வகையில் செய்யப்படவுள்ள பாதுகாப்பு விவரம்.
17. மாநாட்டில் கலந்து கொள்ளும் நபர்களுக்கு மருத்துவ வசதிகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளதா, அவ்வாறு செய்யப்பட இருப்பின் மருத்துவக்குழு மற்றும் ஆம்புலன்ஸ் விவரங்கள்.
18. மாநாட்டில் கலந்துகொள்ள வரும் நபர்கள் உள்ளே மற்றும் வெளியே செலலும் வழித்தடங்கள் எத்தனை?
19. கட்சியின் தலைவர் மற்றும் முக்கிய நபர்கள் மேடைக்கு செல்லும் வழித்தடம் பற்றிய விவரம்.
20. மாநாட்டுக்கு வரும் வாகனங்கள் நிறுத்தும் ஒவ்வொரு இடத்துக்கும் உள்ளே மற்றும் வெளியே செல்லும் வழித்தடங்கள் எத்தனை?
21. மாநாட்டுக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரம் எங்கிருந்து பெறப்படுகிறது, அதற்கான அனுமதி விவரம்.
இவ்வாறு 21 கேள்விகளை தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி ஆனந்துக்கு காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இதற்கு அவர் அளிக்கும் பதிலைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கைகள் இருக்கும் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
மாநாடு நிச்சயம் நடைபெறும்: காவல்துறை சார்பில் கோரப்பட்டுள்ள 21 கேள்விகளுக்கும் உரிய முறையில் பதிலளிக்கப்படும். தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு திட்டமிட்டப்படி நடைபெறும் என்றுதமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி எம். ஆனந்த் தெரிவித்துள்ளார்.