டிரம்ஸ் ஜெர்ரி என்டர்டைன்மெண்ட் சார்பில் கிளாடி ஜெராடு அவர்கள் தயாரிப்பில், “உறவுகள்” என்ற தலைப்பில் “உயிரிணையே” இசை ஆல்பம் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் நடைப்பெற்றது.

பிரபல இசையமைப்பாளரும், பாடலாசிரியரும், இயக்குநருமான கங்கை அமரன், இசையமைப்பாளர் சதா சுதர்சனம், கண்ணன், தவசீலிதன்ராஜ், சகோ கணேசன், தயாரிப்பாளர் ரவிகாந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் இசையமைப்பாளரும் இயக்குநருமான கங்கை அமரன் பேசியதாவது…

“அப்பெல்லாம் ஏவிஎம் (AVM) ஸ்டுடியோவில் மியூசிசியன்களை மாசக்கணக்குல புக் பண்ணி வச்சிருந்த காலங்கள். ஜானகி அம்மாவா இருக்கட்டும், எம்.எஸ். ராஜேஸ்வரியா இருக்கட்டும், குழந்தைகள் பாடுறதுக்காக அவங்கள மாச சம்பளத்துக்கு அங்கேயே வச்சிருப்பாங்க. தினசரி வந்து பாடல்களைக் கத்துக்கணும், ரிகர்சல் பண்ணணும்னு மாச சம்பளம் கொடுத்து வச்சிருந்த காலம் அது.

ஆனா இந்த காலத்துல கம்ப்யூட்டர்ல போட்டா மியூசிக் வந்துடுது. தன்னுடைய பரம்பரைய நினைக்கும்போது இவங்கள மாதிரி (சதா சுதர்சனம்) அப்பாக்கள் இல்லன்னா இன்னைக்கு மியூசிக்கே டெவலப் ஆயிருக்காது. நாங்கல்லாம் இளையராஜா அண்ணன் வீட்ல போயிட்டு உட்கார்ந்து பார்த்து ரசிச்சவங்க. சதா நிறைய இது மாதிரி பண்ணனும், என்ன அப்பப்ப சாங் எழுத கூப்பிடணும்.”

“சதா பற்றி சொல்லணும்னா, அவர் எந்த பரம்பரையில இருந்து வந்திருக்கார் அப்படிங்கறத பற்றி மிகச் சிறந்த கிட்டாரிஸ்ட். நாங்கல்லாம் ஒரே மாஸ்டர்ட்ட தான் படிச்சோம், ஜி. தர்மராஜ் மாஸ்டர்ட்ட. இளையராஜா அண்ணா, நானு, சதா எல்லாமே அவரிடம்தான் கத்துக்கிட்டோம். சதா அந்த டைம்ல ரொம்ப பிஸியான ஒரு கிட்டாரிஸ்ட். தேவராஜ் மாஸ்டர், தட்சிணாமூர்த்தி சுவாமிகள், அர்ஜுன் மாஸ்டர், தெலுங்குல ராஜா நாகேந்திரா, ஜி.கே. வெங்கடேஷ்னு எல்லார்ட்டயுமே வாசிச்சவர்.

அண்ணனுடைய (இளையராஜா) ஒரு 150 படங்கள், 200 படங்களுக்கு அவர் பக்கத்துல கிட்டார் வாசிச்சவன் நான். ‘பருவமே புதிய பாடல்’ எந்த பாட்டு எடுத்தாலும் ரிதம் கேட்டா நம்மதான் பெஸ்ட். பிலிப்ஸ் அப்படிங்கிறவர் தான் இந்த திரைப்பட உலகத்துல பெஸ்ட் கிட்டார் பிளேயர். எம்.எஸ். விஸ்வநாதன் சார் பேக்ரவுண்ட் எல்லாம் அவர்தான் வாசிப்பார். அப்படிப்பட்டவரோட ஒரே மைக்ல வாசிக்கும் போது அவர் சொன்ன வார்த்தை, ‘நான் பார்த்ததுல பெஸ்ட் ரிதம் கிட்டார் பிளேயர் நீதான்பா’ அப்படின்னு சொன்னது எனக்கு அவ்ளோ பெரிய பெருமை.”

“ஒரு ரீரெக்கார்டிங் நடக்குது, எனக்கு அவ்ளோ தூரம் சோலோ வாசிக்க தெரியாது. கிட்டார்ல எத்தனை கார்டு கொடுத்தாலும் வாசிச்சிருவேன். மெலடி வாசிக்கணும், காலைல 7 மணிக்கு வந்தாங்கன்னா 1 மணி வரைக்கும் ஒரு கால் ஷீட். வாகினி ஸ்டுடியோல ஜி தியேட்டர்ல தேவராஜ் மாஸ்டர்னா எல்லாம் பயப்படுவாங்க. ஏன்னா அங்க சத்தமே இருக்காது, அண்ணன் மாதிரிதான் அமைதியா இருப்பாங்க.

அவர் படத்தை பார்த்துட்டு, ‘அமர் இந்த இடத்துல நீ சோலோ வாசிச்சுக்கோ’ அப்படின்ட்டாரு. எனக்கு கொடுத்த நோட்ஸ் கொடுத்தா வாசிச்சிருவேன். ஆனா சோலோன்னா இஷ்டத்துக்கு வாசிக்கணும். எல்லாம் எட்டு மணி ஆகுது, அந்த ரீல முடிச்சாதான் கால்ஷீட் முடிஞ்சு அவங்க வீட்டுக்கு போகணும். இந்த சீன் வந்து லாஸ்ட்ல வருது. அப்ப எல்லாம் யாராவது தப்பா வாசிச்சாங்கன்னா மறுபடியும் ஃபர்ஸ்ட்ல இருந்து வாசிக்கணும், 10 நிமிஷம் ஓடக்கூடிய ரீல மறுபடியும் முதல்ல இருந்து மியூசிக் எல்லாரும் வாசிக்கணும்.

எனக்கா கை நடுங்குது. ஒன்பதாவது நிமிஷத்துல என்னோட சீன் வருது. அந்த பொண்ணு மாடி மேல இருந்து கீழ வந்து போஸ்ட்மேன்ட்ட லெட்டர் வாங்குற வரைக்கும் நீ சோலோ வாசிச்சுக்கோன்னு சொல்லிட்டாரு. நான் வாசிக்க ஆரம்பிக்கிறேன்… ‘டாடாடாடா…’ அப்படி வாசிச்சுட்டு இருக்கேன், அதுக்கு மேல எனக்கு தெரியல. கட் ஆயி போச்சு. இதே மாதிரி மூணு தரம் போச்சு. வயலின் வாசிக்கிறவங்க எல்லாம் ‘அமர் சீக்கிரம் வாசிச்சிருப்பா நாங்க வீட்டுக்கு போகணும்’னு சொல்றாங்க. எனக்கு இன்னும் உதறுது. இந்த மாதிரில்லாம் அனுபவப்பட்டு, திட்டு வாங்கி, அடி வாங்கி கத்துக்கிட்டு வந்தவங்கதான் நாங்க.”

“இப்ப நம்ம ஒரு லைனை எடுத்தோமா, அது எங்க வாசிக்கிறோம்னு எல்லாம் பீட் பண்ணி இனிமே ஏஐ (AI) தொழில்நுட்பத்துல கொடுத்தாச்சுன்னா அதுவே போட்டு கொடுத்துடுது. நம்ம கால தூக்கவே முடியாது. ஏஐ பண்ணி கொடுத்த பாட்டுலதான் நிறைய போயிட்டு இருக்கு. நிஜமாவே ஏஐ ஒர்க் நம்ம சிந்தனையை கெடுத்துட்டு இருக்கு அப்படிங்கறதை நான் உறுதியா சொல்றேன்.

அதை நம்பி நம்ம வேலை செஞ்சோம்னு சொன்னா பிற்காலத்துல நமக்கு மூளை வேலை செய்யாது. ஒரு டியூனை ஏஐ-ல கொடுத்துட்டு வார்த்தை எழுதுறது, பாடுறதுன்னு பண்ணா இதுல எப்படி நம்ம பேர் போட்டுக்கிறது? ஏன்னா அதை கிரியேட் பண்ணி கொடுத்துடுது, ஆனா இசை ‘கங்கை அமரன்’னு போட்டுக்கறது மரியாதையா? வருங்கால குழந்தைகள் தன்னால் சிந்திக்க கத்துக்கொள்ளணும், சிந்திக்க எழுதிக் கொள்ளணும். வளர்ற குழந்தைகளை நீங்க அப்படி வளங்க, ‘உனக்கு இருக்கிற சுயரூபத்தை வெளியே கொண்டு வா’ அப்படிங்கற மாதிரி சொல்லணும்ங்கறது என் மனசோட ஆசை.”

“நிஜமாவே இந்த மாதிரி ஒரு சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி கொடுத்ததற்கு, கிளாடி அவர்களை பாராட்டணும். ஏன்னா நமக்கு ஒரு நல்ல புரொடியூசர் கிடைச்சிருக்காரு. உங்களோட எண்ணம் நிச்சயமாக ஆழமாக இருக்கும், ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதை சினிமா படமாக கொண்டு வரணும்னு மனசுல இருக்கறது எனக்கு தெரியும்.”

பயில்வான் ரங்கநாதன் சர்ச்சை மற்றும் இளையராஜா குறித்த விளக்கம்

“பிரஸ் நண்பர்கள் எல்லாருக்கும் ஒன்னு சொல்லிக்கிறேன். நல்லவைகளை மட்டும் எழுதுங்கள். பயில்வான் ரங்கநாதன் மாதிரி, ‘அவருக்கு இட்லிக்கு வழி இல்ல, தோசைக்கு வழி இல்ல’ அது மாதிரில்லாம் எழுதாதீங்க தயவுசெய்து. கூப்பிட்டு பயல்வான்ட்டே சொல்லிட்டோம், ‘ஏன்யா இந்த மாதிரில்லாம் எழுதுறீங்க, இல்லாத பொல்லாததெல்லாம் எழுதுறீங்க’ன்னு. இந்த ஸ்டேஜ்ல சொல்ல வேண்டிய கடமை எனக்கு இருக்கு. இல்லாத பொல்லாததெல்லாம் சொல்லி எழுதுறதுக்கு, அவ்வளவு பெரிய ஆளா வளர்ந்த ஆட்களை நம்ம திட்டணுமா?

அவங்க கஷ்டப்படுறாங்க, குழந்தைகள் எல்லாம் ஒண்ணா இருக்காங்க வீட்ல. வேணும்னா எங்க வீட்ல ஒரு வாரம் வந்து இருந்து பாருன்னு சொன்னேன். யுவன் துபாயில செட்டில் ஆயிட்டான், கார்த்திக் அவனும் அங்கதான் இருக்கான். ‘அண்ணன் இதெல்லாம் இல்லாம அனாதையா இருக்காரு’ அப்படி என்னத்தையோ கிரியேட் பண்ணி இளையராஜாவை எதுக்கு இறக்குறீங்க? 50 வருஷம் ஒருத்தர் ஆளுமையா நிலையா நின்றுருக்காரு, அப்படிப்பட்ட ஆளை இறக்கணுமா? நல்லா யோசிச்சு பாருங்க, பயல்வான் எழுதினது கரெக்டா? பயல்வான் அவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்டே ஆகணும்.

எங்களை நேசிச்சு கொண்டு போங்க. ஏன்னா 50 வருஷம் வாழ்ந்துருக்கோம், அண்ணனுக்கு 82 வயசுக்கு மேல ஆகுது. ஆகவே எங்களை காப்பாத்துறதுக்காக எழுதுங்க. நாங்க இதுவரைக்கும் வேலை செஞ்சுட்டு இருக்கோம்யா. பயில்வான் அவர்களுக்கு போன் பண்ணி சொன்னப்ப ‘ஸாரி’ன்னு சொல்லி சொன்னாரு, ‘ஐயோ இது தெரியாம யாரோ சொன்னதை நான் போட்டுட்டேங்க தயவு செய்து மன்னிச்சிருங்க’ன்னாரு.

இளையராஜா தனிமையை நாடிக்கொண்டு இருக்கிறார், நான் போனாலே பேசாமல் எழுதிட்டு இருப்பாரு, அவ்வளவுதான் அவர் வேலை. அவரை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன், அவரை அவரா இருக்க விடுங்க. எங்க கனவும் நினைவும் இசையே, இசை இருந்தால் மரணமேது என்று பாடுன மாதிரி இன்னைக்கு வரைக்கும் மியூசிக் லேனை தவிர வேற எங்கயாவது போயிருவோமா? எங்களுக்கு இருக்கற பணத்துக்கும் வசதிக்கும் பில்டிங் கட்டி வாடகைக்கு விட்டு நல்ல லாபம் சம்பாரிச்சு ஒரு பெரிய பில்டர்ஸ் ஆயிருக்கலாம், ஆனா அந்த மாதிரி எல்லாம் எண்ணம் வரல. இசையிலேயே இருக்கிறோம், ஆகையால் எங்கள் மேல் தவறுகளை எழுத வேண்டாம்.”

“இந்த நிகழ்ச்சி நடத்துவதற்கு மிக ஆதாரமாக இருந்த நமது பாபு அவர்களுக்கு, டைமண்ட் பாபு அவர்களுக்கு ரொம்ப நன்றி. பாபு தான் அண்ணனுக்கும் (இளையராஜா) சரி, எங்களுக்கும் சரி ரொம்ப பக்கத்து துணையாக இருப்பவர். எந்த வேலைனாலும் நிமிஷத்துல அரேஞ்மெண்ட் பண்ணி கொடுப்பார். நாங்க அந்த காலத்துல நாடகத்துல வாசிக்கும் போது இவங்க அப்பாவோட எங்களுக்கு பழக்கம், அவங்க அப்பாதான் எங்களை அப்ப தூக்கி வளர்த்தவர். இன்றைக்கு பார்த்தால் அவங்க அப்பா எப்படி இருந்தாரோ அதே மாதிரி இவரும் எல்லாரோடையும் சேர்ந்து அரவணைப்பாக இருக்கிறார், ரொம்ப நன்றி பாபு” என்று கங்கை அமரன் தனது உரையை நிறைவு செய்தார்.

இவ்விழாவில் இசையமைப்பாளர் சதா சுதர்சனம் பேசியதாவது…

எல்லாருக்கும் வணக்கம். இந்த சாங் வந்து எனக்கு ஆப்பர்சுனிட்டி கொடுத்த கிளாடி ஜெராடு சாருக்கு ரொம்ப நன்றி. அதுல ரொம்ப ஹைலைட் கங்கை அமரன் அண்ணன் பாட்டு எழுதினதுதான். நான் அவர்கிட்ட, நாங்க கார்ல போயிட்டு இருக்கோம்… நான் டியூன் போட்டேன், அப்படியே உடனே கேட்டுட்டு ஒரு 10 நிமிஷத்துக்குள்ள பாட்டை எழுதி எனக்கு கொடுத்துட்டாரு. இந்த சாங் இவ்வளவு சூப்பரா வந்துருக்கு, நீங்க பார்த்தீங்களா இந்த பாட்டை?

அப்புறம் நான் இவ்வளவு தூரம் மியூசிக் பண்றதுக்குக் காரணம் இளையராஜா சார்தான். அவர்கிட்ட ஒர்க் பண்ண எக்ஸ்பீரியன்ஸ்… அவர் பார்த்தீங்கன்னா எனக்கு சேலபோன், வைப்ரோபோன், எலக்ட்ரிக் கிட்டார், அக்வாஸ்டிக் கிட்டார்னு எல்லா இன்ஸ்ட்ருமெண்ட்டையும் வாசிக்க என்கரேஜ் பண்ணிருக்காரு. அவர்கிட்ட ஒர்க் பண்ண அந்த எக்ஸ்பீரியன்ஸ இந்த ஜென்மம் இல்லை, எந்த ஜென்மத்திலயும் என்னால மறக்க முடியாது. இளையராஜா, ஐ லவ் யூ… 

 

இவ்விழாவில் தயாரிப்பாளரும் இயக்குநருமான கிளாடி ஜெராடு (Claude Gerard) பேசியதாவது…

“இங்கு வந்திருக்கும் பத்திரிகை, ஊடகம் மற்றும் இணையதள நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வணக்கங்கள். இந்த மேடையில் என்னோடு அமர்ந்திருக்கும் மதிப்பிற்குரிய அண்ணன் கங்கை அமரன் அவர்களுக்கும், மூத்த இசைக்கலைஞர் மாஸ்டர் சதா சுதர்சனம் அவர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வசித்து வந்தாலும், தமிழ் மொழியின் மீதும், தமிழ் கலை-கலாச்சாரத்தின் மீதும் எனக்கு எப்போதுமே மிகப்பெரிய காதலும் பற்றும் உண்டு. அதன் வெளிப்பாடாகத்தான் இந்த ‘Drums Jerry Entertainment’ நிறுவனத்தைத் தொடங்கி, அதன் மூலம் இந்த ‘உயிரிணையே’ இசை ஆல்பத்தை உருவாக்கியுள்ளோம்.”

“இன்றைய நவீன காலகட்டத்தில், பெரும்பாலான பாடல்கள் மற்றும் இசையமைப்புகள் கணினி மயமாக்கப்பட்ட (Computerized Loops) சூழலில் வந்து கொண்டிருக்கின்றன. ஆனால், நான் ஒரு காலத்தால் அழியாத, மென்மையான மற்றும் தூய்மையான காதல் மெலடி பாடலை உருவாக்க வேண்டும் என்று விரும்பினேன். அதற்கு உண்மையான இசைக்கருவிகளை (Acoustic and Natural Instruments) மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன்.

இசைஞானி இளையராஜா அவர்களின் குடும்பத்தின் மீதும், அவர்களின் இசைப் பயணத்தின் மீதும் எனக்கு எப்போதுமே அலாதியான மரியாதையும் அன்பும் உண்டு. அந்த வகையில், இந்த ‘உயிரிணையே’ பாடலுக்கு வரிகள் எழுத அண்ணன் கங்கை அமரன் அவர்களை அணுகியபோது, அவர் உடனடியாகச் சம்மதித்தது எனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம். அவர் மிக அழகான, ஆழமான தமிழ் வரிகளை இந்த ஆல்பத்திற்காக எழுதிக் கொடுத்துள்ளார்.

அதேபோல், தமிழ் சினிமாவின் மிக மூத்த கிட்டார் கலைஞரும் இசையமைப்பாளருமான சதா மாஸ்டர், தனது அசாத்திய திறமையால் இந்த ஆல்பத்திற்கு மிக அற்புதமான மெல்லிசை அமைத்துக் கொடுத்து, பாடலுக்கு உயிர் சேர்த்துள்ளார்.”

“இந்த ‘உயிரிணையே’ பாடலை வெறும் தமிழ்நாட்டோடு மட்டும் நிறுத்தாமல், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, துபாய் என உலகம் முழுவதும் வாழும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களது நோக்கம். உலக ரீதியாக தமிழ் இசை இன்னும் பெரிய உயரங்களை எட்ட வேண்டும் என்பதற்காகத் தொடர்ந்து பாடுபட்டு வருகிறோம்.

இந்த இசை ஆல்பம் என்பது எனது கலைப் பயணத்தின் ஒரு ஆரம்ப முயற்சிதான். உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் மற்றும் தமிழக ஊடகங்கள் எங்களுக்குத் தரும் ஆதரவை மூலதனமாகக் கொண்டு, மிக விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு முழு நீளத் திரைப்படத்தை (Feature Film) தயாரித்து இயக்கத் திட்டமிட்டுள்ளேன். அதற்கான ஆரம்பக்கட்ட கதைக் களப் பணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. அதைப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும்.”

“இந்த ஆல்பத்தில் மிக அற்புதமாகப் பாடியுள்ள இளம் பாடகர்கள் தவசீலன், ஃபர்ஹான் நவாஸ் மற்றும் இதில் உழைத்த அனைத்து தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளும் நன்றிகளும்.

அதேபோல், இந்த இசை வெளியீட்டு விழாவை இவ்வளவு பிரம்மாண்டமாகவும் நேர்த்தியாகவும் ஒருங்கிணைத்துக் கொடுத்த மக்கள் தொடர்பாளர் (PRO) டைமண்ட் பாபு அவர்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களைப் போன்ற சுயாதீனக் கலைஞர்களுக்கும் (Independent Artists), புதிய முயற்சியோடு வரும் தயாரிப்பாளர்களுக்கும் ஊடக நண்பர்களாகிய நீங்கள் எப்போதுமே பேராதரவு தர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்,” என்று கிளாடி ஜெராடு தனது உரையை நிறைவு செய்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here