சென்னை மேற்கு மாம்பலம் போஸ்டல் காலனியைச் சேர்ந் தவர் ராஜேஷ் குமார் (42). தனியார் ஐடி நிறுவன ஊழியரான இவர், தனது தாய் தமிழ்செல்வியுடன் (63) வசித்து வருகிறார். கடந்த 14ம் தேதி, கோயிலுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தமிழ்செல்வி மாடிப் படிகளில் ஏறிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரைப் பின் தொடர்ந்து வந்த மர்ம நபர் ஒருவர், தமிழ் செல்வி கழுத்தில் இருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு, வெளியே தயாராக இருந்த இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றார்.

இது குறித்து அசோக் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், நகை பறிப்பில் ஈடுபட்ட ராயபுரம், சாந்தி காலனியைச் சேர்ந்த சீனிவாசன் (49) என்பவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பறிக்கப்பட்ட நகையை மயிலாப்பூரைச் சேர்ந்த நண்பர் குமரேசன் (34) மூலமாக ஒரு தனியார் வங்கியில் அடமானம் வைத்து, ரூ.5 லட்சம் பெற்றது தெரியவந்தது.

அந்த பணத்தில், குமரேசனுக்கு கமிஷன் கொடுத்துவிட்டு, மீதமுள்ள தொகையில் ரூ.2 லட்சத்தை கண்ணகி நகரைச் சேர்ந்த அனிதா (34) என்ற பெண்ணிடம் சீனிவாசன் கொடுத்து வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த குமரேசன் மற்றும் அனிதாவையும் போலீஸார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ.1.91 லட்சம் ரொக்கப் பணத்தைப் பறிமுதல் செய்த போலீஸார், மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here