சிதம்பரம் அருகே உள்ள பரங்கிப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான ஷேக் இஸ்மாயில். இவரது மனைவி 48 வயதான பர்கத்நிஷா. ஷேக் இஸ்மாயில் பு.முட்லூரில் உள்ள ஒரு தனியார் உணவகத்தில் பணியாற்றி வருகிறார். கடந்த 6 ஆம் தேதி இரவு ஷேக் இஸ்மாயிலை பார்க்கச் சென்ற பர்கத்நிஷா, இரவு 11 மணி அளவில் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார். ஆனால் அவர் வீட்டிற்குச் சென்று சேரவில்லை. உறவினர்கள் அவரை தேடியபோது, மறுநாள் காலை பு.முட்லூரில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் வழியில், ஒரு இடத்தில் பர்கத்நிஷா தலையில் காயத்துடன் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பரங்கிப்பேட்டை போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். அவர் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஏதேனும் விபத்தில் சிக்கி உயிரிழந்தாரா? அல்லது கொலை செய்யப்பட்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்நிலையில் உடற்கூறாய்வில் பர்கத்நிஷா கழுத்து நெரித்து கொல்லப்பட்டதாக தெரியவந்ததையடுத்து, போலீசாரின் சந்தேகம் அவரது கணவர் மீது திரும்பியுள்ளது. கணவர் ஷேக் இஸ்மாயிலை பரங்கிப்பேட்டை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்துள்ளன. ஷேக் இஸ்மாயில் வேலை செய்யும் கடையில் தீர்த்தாம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த வீரம்மாள் என்பவர் வேலை செய்து வந்தார்.

வீரம்மாளுக்கும் ஷேக் இஸ்மாயிலுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த பர்கத்நிஷா தொடர்ந்து தனது கணவரையும், வீரம்மாளையும் கண்டித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி இரவு பர்கத்நிஷா முட்லூரில் உள்ள உணவகத்திற்குச் சென்று தனது கணவரிடம் இந்த பிரச்சினை சம்பந்தமாக சண்டை போட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வீரம்மாள் பர்கத்நிஷாவை தீர்த்துக்கட்டிவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார்.

அதற்காக தனது மகன் அகில்ராஜை செல்போனில் அழைத்து தனது திட்டத்தைக் கூறியிருக்கிறார். அகில்ராஜ் தனது கூட்டாளி அஜய் என்பவரை அழைத்துக் கொண்டு, இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த பர்கத்நிஷாவை பின்தொடர்ந்து சென்றுள்ளார். குறிப்பிட்ட இடத்தில் நிஷாவை வழிமறித்து முகத்தில் தாக்கி நிலைகுலைய வைத்த அவர்கள், பின்னர் கழுத்தை நெரித்து படுகொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. சந்தேக மரணம் வழக்கை கொலைவழக்காக மாற்றிப் பதிவு செய்த போலீசார் கொலை தொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here