கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த டெய்லர் ராஜா, 29 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். 1998-ல் கோவையில் நடந்த குண்டுவெடிப்புகளில் 58 பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக சிபிசிஐடி சிறப்புப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரித்தனர். இவ்வழக்கில் அல்-உம்மா இயக்கத்தைச் சேர்ந்த பாஷா உட்பட 160-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும், உக்கடம் பிலால் காலனியைச் சேர்ந்த டெய்லர் ராஜா (எ) ஷாஜகான் ஷேக் (48), முஜிபுர் ரஹ்மான் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர். இருவர் குறித்த தகவல்களைத் தெரிவித்தால் ரூ.2 லட்சம் லட்சம் சன்மானம் வழங்கப்படும் என போலீஸார் தெரிவித்திருந்தனர். இதற்கிடையில், கோவை குண்டுவெடிப்பு வழக்கு, மேற்கு மண்டல தீவிரவாத தடுப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டு, எஸ்.பி. பத்ரிநாராயணன் தலைமையிலான போலீஸார் இருவரையும் தேடி வந்தனர். கடந்த வாரம் ஆந்திராவில் பதுங்கியிருந்த அபுபக்கர் சித்திக், முகமது அலி ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.
இதையடுத்து கிடைத்த தகவல்கள் அடிப்படையில், கர்நாடகா மாநிலம் விஜயபுரா மாவட்டத்தில் தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜாவை தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்து, கோவைக்கு அழைத்து வந்தனர். கோவை ஜே.எம்.5-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டெய்லர் ராஜாவை, வரும் 24-ம் தேதி வரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

















