ஊட்டியில் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.143.69 கோடி ரூபாய் செலவில் 700 படுக்கைகளுடன் நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை திறக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் முதல்வர் ஸ்டாலின் மருத்துவமனையை திறந்து வைத்தார். இந்நிலையில், நீலகிரி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழக முதல்வர் ஸ்டாலின்  நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று அதன் செயல்பாடுகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.

மேலும், மருத்துவமனையில் உள்ள நோயாளிகளிடம் மருத்துவ வசதிகள் குறித்தும், அவர்களது தேவைகள் குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது, சிகிச்சைக்கு வரும் முதியவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றும், மருத்துவமனைக்கு நேரில் வந்து சிகிச்சை பெற முடியாத நோயாளிகளுக்கு ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம், சாலை விபத்துகளில் காயமடைந்தவர்களுக்கு ‘இன்னுயிர் காப்போம் – நம்மை காக்கும் 48’ திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர்களிடம் அறிவுறுத்தினார்.

மேலும், பயிற்சி மருத்துவர்களிடம் கலந்துரையாடி, சிகிச்சைக்கு வரும் மக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். அத்துடன் மருத்துவப் பணியாளர்களின் வருகை பதிவேடுகள், மருந்து இருப்பு பதிவேடுகள் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனைத் தொடர்ந்து நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரிக்கு தமிழக முதல்வர் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது மருத்துவக் கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடிய போது, வீட்டிற்கும் நாட்டிற்கும் பெருமைத் தேடி தரும் வகையில் சேவை மனப்பான்மையுடன் மருத்துவப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினார். பின்னர், மருத்துவக் கல்லூரி மாணவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

அப்போது அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்:

”கடந்த ஏப்ரல் மாதம் திறந்து வைத்த நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் செயல்பாடுகளை இன்று நேரில் ஆய்வு செய்தேன். ரூ.143 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இம்மருத்துவமனை மக்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. தினசரி 1,300 வெளி நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகிறன்றனர். மேலும், உள் நோயாளிகள் சிகிச்சையும் சிறப்பாக அளிக்கப்பட்டு வருகிறது.

தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் செலுத்தி எடுத்து வந்த எம்ஆர்ஐ, சி.டி.ஸ்கேன் போன்றவை கட்டணமில்லாமல் தற்போது நோயாளிகள் எடுத்து வருகின்றனர். மருத்துவக் கல்லூரி மாணவர்களை நேரில் சந்தித்தபோது, அவர்களுக்கு செய்து தரப்பட்டுள்ள வசதிகள் குறித்தும், தேவைகள் குறித்தும் கேட்டறிந்ததாகவும், அப்போது எந்த குறையுமில்லாமல் சிறப்பாக உள்ளதாக அம்மாணவர்கள் தெரிவித்தனர். தேவைப்படும் கூடுதல் வசதிகளையும் செய்து தர அரசு தயாராக உள்ளது” என்று அவர் கூறினார்.

இந்நிகழ்வின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா, நீலகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் மருத்துவர் எம்.கீதாஞ்சலி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here