சென்னை – தூத்துக்குடி இடையிலான பயணிகள் போக்குவரத்து இரயிலில் நெரிசலை தடுக்க ஒன்றிய அரசு எடுத்திருக்கும் நடவடிக்கை குறித்து நாடாளுமன்றத்தில் ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
1. தமிழ்நாட்டின் மிக முக்கிய வணிக நகரமான தூத்துக்குடியில் இருந்து தலைநகரம் சென்னைக்கு அன்றாடம் முத்து நகர் விரைவு வண்டி ஒரு இரயில் மட்டுமே ஓடுகிறது. அதில் கூட்ட நெரிசலைக் குறைக்கவும், மேலும் அதிகரிக்கும் வணிக தொடர்புகளை கருத்தில்கொண்டும், தஞ்சாவூர் மற்றும் கும்பகோணம் வழியாக பழைய ஜனதா விரைவு வண்டி வழித்தடத்தில் புதிய விரைவு வண்டி இரயிலை அறிமுகப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசாங்கத்திடம் அவர் கேட்டுள்ளார்.
 
அதேபோல் தூத்துக்குடியிலிருந்து குருவாயூர் மற்றும் நாகர்கோவில் விரைவு வண்டிகளை இணைக்கும் இணைப்பு பயணிகள் இரயில்களை அரசாங்கம் மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளதா என்றும் ஏற்கனவே கோரிக்கை வைத்துள்ளபடி சென்னை தூத்துக்குடி இடையில் வந்தே பாரத் விரைவு வண்டியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டுமிட்டுள்ளதா? எனவும் கேட்டுள்ளார்.
 
2. தேசிய புவிசார் திட்டத்தின் நோக்கங்கள் என்ன?
 
வட சென்னை திமுக எம். பி. டாக்டர் கலாநிதி வீரசாமி கேள்வி
தேசிய புவிசார் திட்டத்தை(NATIONAL GEOSPATIAL MISSION ) குறித்து விரிவான விளக்கமளிக்குமாறு ஒன்றிய அரசிடம் நாடாளுமன்றத்தில் வடசென்னை திமுக மக்களவை உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இந்த திட்டத்தின் குறிக்கோள் மற்றும் அதன்கீழ் மதிப்பிடப்பட்ட நிதிகளின் விவரங்கள், அடிப்படை புவிசார் உள்கட்டமைப்பு மற்றும் தரவை உருவாக்குவதற்கான திட்டங்கள், இந்தியாவின் இடஞ்சார்ந்த தரவு அமைப்புகளின் நவீனமயமாக்கலுக்கு இது எவ்வாறு பங்களிக்கும் என்பது குறித்தான ஆய்வுகள், இந்த திட்டத்தின்கீழ் உருவாக்கப்பட்ட புவிசார் தரவு மற்றும் உள்கட்டமைப்பின் நீண்டகால நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை அரசாங்கம் எவ்வாறு உறுதி செய்யும் மற்றும் தொடர்ச்சியான புதுப்பிப்புகள் மற்றும் பராமரிப்புக்கான நடவடிக்கைகள் என்ன அவர் குறிப்பிட்டு கேட்டுள்ளார்.
 
3. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை உருவாக்கும் மாநிலங்களுக்கு சலுகைகள்
 
தஞ்சாவூர் திமுக எம்.பி. முரசொலி கோரிக்கை
நாட்டில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க உபரி எரிசக்தியை உற்பத்தி செய்யும் மாநிலங்களுக்கு அரசாங்கம் ஊக்கமளித்துள்ளதா என்பது குறித்து நாடாளுமன்றத்தில் தஞ்சாவூர் திமுக மக்களவை உறுப்பினர் முரசொலி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
பல்வேறு மாநிலங்களில் நிறுவப்பட்டு பயன்பாட்டில் உள்ள புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி அமைப்புகளின் திறன் பற்றிய விவரங்கள் மற்றும் கடந்த ஐந்து ஆண்டுகளில், திட்ட வாரியாக, பல்வேறு புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மின் உபரி உற்பத்தி மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்ட மற்றும் வழங்கப்பட்ட நிதிகளின் விவரங்கள் வெளியிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.
 
4. இந்தியை மட்டும் வளர்க்கும் ஒன்றிய அரசு!
மற்ற அலுவல் மொழிகளுக்கு செய்யும் துரோகம்!
திமுக எம்.பி. டாக்டர் கனிமொழி சோமு குற்றச்சாட்டு
இந்திய அலுவல் மொழித்துறை தேசிய அளவில் இந்தியை மட்டும் ஊக்குவிற்பதாக நாடாளுமன்றத்தில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் டாக்டர் கனிமொழி சோமு குற்றம் சாட்டியுள்ளார்.
 
இதுவரையில் இந்தியை மேம்படுத்துவதற்காக அமைச்சகத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் அதற்காக செலவிடப்பட்ட தொகையின் விவரங்கள் என்ன என கேட்டுள்ள அவர் இந்த நடவடிக்கை மாநிலங்களின் மொழியியல் பன்முகத்தன்மை மற்றும் பண்பாட்டு அடையாளங்களை குறைத்து மதிப்பிடுவதுடன் பிராந்திய மொழி பேசுபவர்களுக்கு அநீதி ஏற்படுத்துகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
அரசியலமைப்பின் வழிகாட்டுதலின்படி அனைத்து பிராந்திய மொழிகளுக்கும் சமமான மேம்பாட்டை உறுதி செய்ய அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் என்ன என பதிலளிக்குமாறும் கனிமொழி சோமு எம்.பி. கேட்டுள்ளார்.
 
5. வாடிக்கையாளர்களின் தனியுரிமை மற்றும் பாதுக்காப்பிற்கு அச்சுதுறுத்தல்
 
நடவடிக்கை கோரிய பொள்ளாச்சி எம்.பி. கே. ஈஸ்வரசாமி.
இணைய சேவை வழங்குநர்கள் (ISP-கள்) குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வாடிக்கையாளர்களின் அனைத்து ஆன்லைன் செயல்பாடுகளின் பதிவையும் வைத்திருக்க வேண்டும் என அறிவுறுத்துமாறு உளவுத்துறை தொலைத்தொடர்புத் துறையை (DoT) கேட்டுக் கொண்டது குறித்து பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் கே. ஈஸ்வரசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
 
இதற்கு அரசு மற்றும் ISP-களின் பதில் என்ன என்றுகேட்டுள்ள அவர், அத்தகைய பதிவுகளை வைத்திருப்பது வாடிக்கையாளரின் தனியுரிமை மற்றும் பாதுகாப்பை அச்சுறுத்தும் எனவும், அரசாங்கம் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
 
6. கசிவுகளினால் வீணாகும் உணவுப் பொருட்கள், நடவடிக்கை என்ன?
 
அரக்கோணம் திமுக எம்.பி. ஜெகத்ராட்சகன் கேள்வி
பொது விநியோக முறையில் (PDS) ஏற்பட்ட கசிவுகளினால் உணவு தாணியங்கள் வீணாவதுடன் திட்டமிடப்பட்ட பயனாளிகளை சென்றடையத் தவறுவது குறித்து நாடாளுமன்றத்தில் அரக்கோணம் திமுக மக்களவை உறுப்பினர் ஜெகத்ரட்சகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
 
கடந்த மூன்று ஆண்டுகளில், மாநில வாரியாக, கசிவுகளினால் வீணான உணவு தானியங்களின் மதிப்பின் அளவு எவ்வளவு? அதே காலகட்டத்தில் இந்த பொது விநியோக முறை கசிவுகளால், கருவூலத்திற்கு ஏற்பட்ட ஆண்டு நிதி இழப்பு எவ்வளவு? டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகளை அறிமுகப்படுத்தி கசிவுகளைக் குறைக்க செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் என்ன? திட்டமிடப்பட்ட பயனாளிகளுக்கு முறையாக உணவுப் பொருட்கள் கிடைக்கப்பெறுவதை அரசாங்கம் உறுதி செய்துள்ளதா என்று பல்வேறு கேள்விகளை அவர் உணவு மற்றும் பொது விநியோகத் துறை அமைச்சகத்திடம் கேட்டுள்ளார்.
 
7. இரயில் நிலையங்கள் மறுசீரமைப்பு, தாமதம் ஏன்?
 
ஆரணி திமுக எம்.பி. தரணிவேந்தன் கேள்வி தமிழ்நாட்டில் மட்டுமல்லாது நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இரயில் நிலையங்கள் பராமரிப்பின்றி இருப்பதை சுட்டிக்காட்டி நாடாளுமன்றத்தில் ஆரணி திமுக எம். பி. தரணிவேந்தன் ஒன்றிய இரயில்வே அமைச்சகத்திடம் பின்வரும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.
 
அடுத்த ஐந்து ஆண்டுகளில் மறுசீரமைப்புக்கு திட்டமிடப்பட்டுள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை?
இந்தத் திட்டத்திற்காக இரயில் நிலையங்களைத் தேர்ந்தெடுக்கப் பயன்படுத்தப்படும் அளவுகோல்கள் என்ன?
மறுசீரமைப்பிற்காக ஒதுக்கப்பட்ட மொத்த நிதி எவ்வளவு? இந்த மறுசீரமைப்பு நிலையங்களில் உள்கட்டமைப்பு, பயணிகள் வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகள் என்ன? மறுசீரமைப்பு திட்டத்தை முடிப்பதற்காக எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன?
 
மறுசீரமைப்புச் செயல்பாட்டில் பொது-தனியார் கூட்டமைப்பின் (பிபிபி) பங்கு மற்றும் குறிப்பிட்ட நிலையங்களின் மேம்பாட்டுக்காக ஏதேனும் தனியார் பங்கேற்பாளர்கள் ஈடுபட்டிருந்தால் அவர்களின் விவரங்கள் என்ன?
வழக்கமான ரயில் சேவைகளுக்கு இடையூறு விளைவிக்காமல் நிலையங்களின் மறுசீரமைப்பை உறுதி செய்ய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாது?
கட்டுமானப் பணிகளின் போது பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தைக் குறைக்க அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட/எடுக்கப்படும் நடவடிக்கைகள் என்ன?
 
8. பல்கலைக் கழக தன்னாட்சியை பாதிக்கும் UGC வழிகாட்டுதல்கள்
 
வரைவில் மாற்றம் கோரும் திமுக எம்.பி. திருச்சி சிவா
பல்கலைக்கழக மானியக் குழு வரைவு வழிகாட்டுதல்களின்படி மாநில பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி பாதிக்கப்படும் என பெரும்பாலன தரப்புகளிடமிருந்து கருத்துகள் வந்துள்ளதை ஒன்றிய அரசு கருத்தில் கொண்டுள்ளதா என்றும் அதன் மீது விரிவான விளக்கம் கேட்டும் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வித்துறை அமைச்சரிடம் பின் வரும் கேள்விகளை முன்வைத்துள்ளார்.
NET/SET போன்ற ஒரே மாதிரியான தகுதிகளை விதிப்பதன்மூலம் இந்த வரைவு கல்வியாளர்களின் தனித்துவமான கல்வி மற்றும் பண்பாட்டு பங்களிப்புகளைக் கணக்கிடத் தவறிவிட்டது எனும் குற்றச்சாட்டை அமைச்சகம் ஒப்புக்கொள்கிறதா?
 
இந்த வரைவு பல்கலைக் கழக வேந்தராக மாநில ஆளுநரின் செயல்பாடுகளை அதிகரித்திருக்கிறது என எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளை அமைச்சகம் மதிப்பாய்வு செய்துள்ளதா?
இந்த வரைவின் மீதான விமர்சனங்கள் குறித்து மாநில அரசுகள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் ஏதேனும் ஆலோசனைகள் நடத்தப்பட்டதா?
 
9. உயர்கல்வித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு
 
திமுக எம்.பி. ஆர். கிரிராஜன் கேள்வி உயர்கல்வித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர். கிரிராஜன் நாடாளுமன்றத்தில் ஒன்றிய கல்வி அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளர்.
அதில் கடந்த ஐந்து ஆண்டுகளில் உயர்கல்விக்கான ஒட்டுமொத்த வருடாந்திர செலவு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒன்றிய நிதியின் சதவீதம் என்ன? GER மற்றும் Ph.D. ஆராய்ச்சி பட்டங்களின் அடிப்படையில் தமிழ்நாடு போன்ற சிறப்பாகச் செயல்படும் மாநிலங்களுடன் பொருந்தக்கூடிய வகையில் நாட்டில் உயர்கல்வியை மேம்படுத்த அரசு எடுத்த நடவடிக்கைகள் யாவை? பல்கலைக் கழக மானியக் குழுவின் முக்கிய ஆராய்ச்சித் திட்டங்கள், பல்கலைக் கழக மானியக் குழுவின் சிறு ஆராய்ச்சித் திட்டங்கள், RUSA, IMPRESS, IMPRINT மற்றும் பிற குறிப்பிட்ட உயர்கல்வித் திட்டங்களுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் செலவு விவரங்கள் யாவை? என அவர் கேட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here