அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில், ஆராய்ச்சி என்ற பெயரில் வீட்டிலேயே போதைப் பொருள் தயாரித்த கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
சென்னையில் கல்லூரி மாணவர்கள் சிலர் போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருவதாக போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவு போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பிரிவு போலீஸார் நேற்று முன்தினம் கொடுங்கையூர் பகுதியில் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது, இளைஞர்கள் 7 பேர் பிடிபட்டனர். அவர்களிடமிருந்து அதிக விலை கொண்ட 250 கிராம் மெத்தம்பெட்டமைன் (ஒரு கிராம் சுமார் ரூ.2500), 6 செல்போன்கள், எடைபோடும் சிறிய வகை இயந்திரம், கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பின்னர், அனைவரையும் கொடுங்கையூர் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர். பிடிபட்ட 7 பேரில் 4 பேர் சென்னையில் உள்ள பிரபலமான இன்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருகின்றனர். ஒருவர் சென்னையில் உள்ள பிரபல கல்லூரி ஒன்றில் முதுநிலை வேதியியல் பிரிவில் படித்து வருகிறார். இவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து கொடுங்கையூர் பின்னி நகரில் உள்ள வீட்டில் மெத்தம்பெட்டமைன் வகை போதைப் பொருளைத் தயாரிக்க பல நாட்களாக திட்டமிட்டு அதற்கான பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குறிப்பாக அந்த வகை போதைப் பொருளில் உள்ள மூலக் கூறுகளை ஆராய்ந்து, அதற்கான மூலப்பொருட்களை (கெமிக்கல்) பாரிமுனையில் உள்ள கடைகளில் ஆய்வக ஆராய்ச்சிக்காக வேண்டும் எனக்கூறி வாங்கியுள்ளனர். மொத்தம் ரூ.3 லட்சத்தை கையில் வைத்துக் கொண்டு, மெத்தம்பெட்டமைன் போதைப் பொருளை தயாரித்து அதை விற்பனை செய்து பல லட்சம் ரூபாய் சம்பாதிக்கலாம் என இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்.
இதை செயல்படுத்தும் வகையில் வீட்டிலேயே ஆய்வகத்தை வைத்து போதைப் பொருளை தயாரித்துள்ளனர். வீட்டில் இருந்தவர்களும் வேதியியல் மாணவர்கள் ஆராய்ச்சி செய்கிறார்கள் என கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். இந்த மெத்தம்பெட்டமைன்போதைப் பொருள் தயாரிப்பு விவகாரத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என கைது செய்யப்பட்ட மாணவர்கள் உட்பட 7 பேரிடமும் போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.