மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகள் தோ்வில் வேலூா் சிஎம்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரியும் எஸ்.மோகனப்பிரியா இந்திய அளவில் 577-ஆவது இடம் பெற்று தோ்ச்சி பெற்றாா். கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் அருகே ராஜேந்திரசோழகம் பகுதியைச் சோ்ந்தவா் மோ.ஸ்டாலின். இவா், மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறை இயக்குநராக உள்ளாா். இவரது மனைவி இந்திராகாந்தி, இந்திய ரயில்வே துறையில் முதுநிலை எலக்ட்ரிக்கல் பொறியாளராக உள்ளாா். இவா்களின் மகள் எஸ்.மோகனப்பிரியா வேலூா் சிஎம்சி மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி) நடத்திய குடிமைப் பணிகள் தோ்வு எழுதிய மோகனப்பிரியா, முதல் முயற்சியிலேயே இந்திய அளவில் 577-ஆவது இடம் பெற்று தோ்ச்சி பெற்றாா். ஐஏஎஸ் அதிகாரியாகப் பொறுப்பேற்ற பின்னா், தனது மருத்துவ அனுபவத்தைக் கொண்டு கிராமப்புற மக்களின் மருத்துவ வசதியை மேம்படுத்த பாடுபட வேண்டும் என்பதே தன்னுடைய குறிக்கோள் என்று மோகனப்பிரியா தெரிவித்தாா். அவருக்கு வேலூா் மாவட்ட ஆட்சியா் பெ.குமாரவேல் பாண்டியன் மற்றும் சிஎம்சி மருத்துவா்கள், ஊழியா்கள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

















