சண்டைப் பயிற்சியாளர் அனல் அரசு இயக்கத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா சேதுபதி மற்றும் பலர் நடிப்பில் வெளியான படம் ‘பீனிக்ஸ்’
விமர்சனம்:
சூர்யா சேதுபதி பொதுமக்கள் முன்னிலையில் MLA -வை கொடூரமாக வெட்டிக் கொலை செய்கிறான். காவல்துறை அவனைக் கைது செய்து சிறார் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்க, அந்த MLAவின் குடும்பமும், கட்சியும் ஹீரோவை எப்படியாவது கொன்று பழிதீர்க்கத் துடிக்கிறார்கள். MLA வின் மனைவி வரலட்சுமி சரத்குமார், சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் வைத்து அவரை கொலை செய்ய அடியாட்களை உள்ளே அனுப்புகிறார். அவர்களை சூர்யா சேதுபதி வெறித்தனமாக அடித்து உள்ளே மாஸ் ஆகிறார். அடுத்து உள்ளே உள்ள போலீஸ் அதிகாரிக்கு பணம் கொடுத்து கொலை முயற்சி நடக்கிறது. அதையும் துணிந்து எதிர்கொள்கிறார் நம்ம அறிமுக ஹீரோ. ஹீரோவை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லும் போது அவர் மீது தொடர்ந்து பெட்ரோல் பாட்டில்கள் வீசப்படுகிறது. பிறகு என்ன நடந்தது? ஏன் இந்த கொலை முயற்சிகள் நடக்கிறது? என்பதே கதை….
எந்தவித தயக்கமோ, தடுமாற்றமோ இல்லாத நடிப்பை சூர்யா வழங்கியுள்ளார். முதல் படம் மாதிரியே தெரியவில்லை. அவரது ஆக்க்ஷன் காட்சிகள் கோபப்படும் காட்சிகள் எல்லாம் சிறப்பு. கதை எனப் பார்க்கும்போது, இது மிகவும் சாதாரணமான, பழி வாங்கும் கதைதான். புதிதான கருவோ, திரைக்கதை அமைப்போ இல்லாவிட்டாலும், முதல் படத்தை தொந்தரவு தருமளவிலான தொய்வுகள் இல்லாமல் அமைத்து ஆச்சரியப்படுத்தியிருக்கிறார் அனல்’ அரசு. படத்தின் விறுவிறுப்புக்கு பஞ்சமே இல்லை தெறிக்க விடுகிறது. “ஜெயிக்கிறது பிரச்னையா, இல்ல நாங்க ஜெயிக்கிறதுதான் பிரச்னையா” என்ற வசனம் சொல்லும் போது அரங்கத்தில் விசில் பறக்கிறது. குழந்தையை சிறைக்குத் தொலைத்த அம்மாவாக புலம்பும் காட்சிகளில் நடிகை தேவதர்ஷிணி கவர்கிறார்.
வில்லனாக எம்.எல்.ஏ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சம்பத் ராஜ், எம்.எல்.ஏ மனைவியாக நடித்திருக்கும் வரலட்சுமி சரத்குமார், நாயகனின் அண்ணனாக நடித்திருக்கும் ‘காக்கா முட்டை’ விக்னேஷ், அபி நட்சத்திரா, வர்ஷா, முத்துக்குமார், திலீபன், அஜய் கோஷ், ஹரிஷ் உத்தமன், மூணாறு ரவி, நவீன், காயத்ரி, அட்டி ரிஷி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஓட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
மைனஸ்: ஜெயிலில் இப்படி வெறித்தனமான கொலை காட்சிகள்! நீதிமன்ற வாசல் சண்டை காட்சியில் இன்னும் கவனம் தேவை!!
மொத்தத்தில் இந்த ‘பீனிக்ஸ்’ வலிமை வாய்ந்தவன், நிச்சயம் அடிப்பான்!