’மிஷன் இம்பாசிபிள்: தி டெட் ரெக்கனிங்’ இரண்டாம் பாகமாக வந்திருக்கிறது இந்த ‘பைனல் ரெக்கனிங்’. வழக்கம்போல, உலகை ஆபத்தின் பிடியில் இருந்து காக்கிற வேலையைத்தான் ‘ஈதன் ஹண்ட்’ பாத்திரத்தின் வழியே இதிலும் செய்திருக்கிறார் டாம் க்ரூஸ்.
உலகத்தைக் காக்கப் புறப்படுகிற ஒரு அமெரிக்க உளவாளியின் கதையைக் கொண்டிருக்கிறது இப்படம். அந்த வகையில், மிக வழக்கமான கதை சொல்லலையே கொண்டிருக்கிறது. ’எண்டைட்டி’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு அமைப்பு உலகத்திலுள்ள பெரிய நாடுகளின் அணு ஆயுத சோதனை பயன்பாட்டைத் தன் வசமாக்கி வருகிறது. அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நான்கு நாடுகள் மட்டுமே அதில் பாக்கி.
இன்னும் மூன்று நாட்களில் அந்நாடுகளிலுள்ள அணு ஆயுதங்களையும் எண்டைட்டி தன்வசமாக்கும்’ என்ற சூழலில், அதன் தொடர்ச்சியாக ‘அணு ஆயுதப் போர்’ நாடுகளுக்கிடையே நிகழும் என்ற நிலையில், அமெரிக்க அரசாங்கம் ஐஎம்எஃப் அமைப்பைச் சேர்ந்த உளவாளி ஈதன் ஹண்ட்டை (டாம் க்ரூஸ்) நாடுகிறது. எண்டைட்டியின் செயல்பாட்டை முடக்க ஈதன் ஹண்ட்டால் மட்டுமே முடியும் என்று அமெரிக்கா நம்புகிறது.
’மந்திரவாதியின் உயிர் ஏழு மலை, ஏழு கடலுக்கு அப்பால் இருக்கிற ஒரு கிளியின் உயிரில் அடங்கியிருக்கிறது’ என்று சொல்லும் ‘பாதாள பைரவி’ போல, எண்டைட்டியை கட்டுபடுத்துகிற சில சாதனங்கள் வடதுருவத்தில் இருக்கிற கடலின் ஆழத்தில் விபத்துக்குள்ளான ஒரு ரஷ்ய நீர்மூழ்கிக் கப்பலில் இருக்கிறது.
அதனைக் கட்டுப்படுத்துகிற இன்னொரு சாதனம் ஈதன் ஹண்ட்டின் எதிரியான கேப்ரியேல் (எசாய் மொரால்ஸ்) வசம் இருக்கிறது. இரண்டையும் ஒன்றிணைக்கிற சாவி ஹண்டிடம் உள்ளது. ஐஎம்எஃப் பிடியில் சிக்காமல் உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒளிந்திருக்கிறார் கேப்ரியேல். உலகையே கட்டுப்படுத்த முயல்கிற எண்டைட்டி தன் செயல்பாடுகளுக்கேற்ற இடமாக ஒரு ‘சர்வர்’ தளமொன்றை நாடுகிறது. அது காங்கோ நாட்டில் இருக்கிறது.
ஆக, மூன்று நாட்களுக்குள் வட துருவத்தில் புதைந்து கிடக்கும் சாதனத்தைக் கண்டுபிடித்து, அதனை காங்கோவுக்கு எடுத்து வந்து, அங்கு தன்னைத் தேடி வருகிற கேப்ரியேலின் வசமிருக்கிற இன்னொரு சாதனத்தைப் பிடுங்கி, அனைத்தையும் ஒன்றிணைத்து ‘எண்டைட்டி’யின் கொட்டத்தை நாயகன் ஈதன் ஹண்ட் அடக்கினாரா? இல்லையா? என்பதே கதை…
பாகத்தின் ஆரம்பத்தில் சிறிது மெதுவாக போவதுபோல் தெரிந்தாலும், ஈதன் கடலில் மூழ்கும் காட்சி, ஹெலிகாப்டர் சிக்வென்ஸ் போன்றவை literally breath-taking. ஹெலிகாப்டர் ஸ்டண்ட் நிகழும் போதே உங்கள் முகத்தில் காற்று வீசும் உணர்வு வரும் – அதேளவுக்கு life-like. தொடரின் முந்தைய பாகங்களை நினைவுபடுத்தும் கனெக்ஷன்கள், Tech Guy-ன் ரீஎன்ட்ரி, ஒரு சாதாரண பிக் பாக்கெட்டாக அறிமுகமாகும் பெண் கதாபாத்திரத்தின் முக்கியத்துவம் இவை அனைத்தும் ஒவ்வொரு தருணத்தையும் அருமையாக கட்டியமைக்கின்றன.
டாம் க்ரூஸ் எனும் நடிகனை ஈதன் ஹண்ட் ஆக காண்பிக்கிற ‘மிஷன் இம்பாசிபிள்’ தீம் இசை ஓரிரு இடங்களில் மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இப்படம் திரையில் சுமார் இரண்டு மணி நேரம் 49 நிமிடங்கள் ஓடுகிறது.
இந்த பாகத்தில் கதை ரசிகர்களை பெரிய அளவில் கவரவில்லை என்றே சொல்லலாம்…
மொத்தத்தில் இந்த ’மிஷன் இம்பாசிபிள்: தி டெட் ரெக்கனிங்’ சுமார் தான்…