ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். கடந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படம் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சென்சார் கிடைக்காததால் இதுவரை வெளியாகவில்லை. நீண்ட போராட்டத்திற்கு பின் ஜனநாயகன் படத்தை மறுதணிக்கை செய்ய தணிக்கை வாரியத்திற்கு படத் தயாரிப்பு நிறுவனம் படத்தை அனுப்பியது. விரைவில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏப்ரல் 30 வரை ஜனநாயகன் படம் வெளியாக வாய்ப்பில்லை எனக் கூறப்பட்டு வரும் நிலையில், தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் தவெக தலைவர் விஜய், தனது ஜனநாயகன் படத்திற்கு கூட்டு சேர்ந்து பிரச்சினை ஏற்படுத்துகிறார்கள் என குற்றஞ்சாட்டியிருந்தார்.
இந்த சூழலில், விஜய்யின் அறிமுக காட்சி மற்றும் இறுதி காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. சுமார் 5 நிமிடத்துக்கு மேலான வீடியோ வேகமாக பரவி வருகிறது. அதேபோல், ஜனநாயகனின் ‘ஒரு பேரே வரலாறு’ பாடல் காட்சிகளும், படத்தின் அறிமுக காட்சியும் என சுமார் ஐந்து நிமிட வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதனைத் தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனமும், படக்குழுவினரும் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.
சட்டவிரோதமாக இணையதளத்தில் பட காட்சிகள் வெளியான நிலையில், இதனை யார் வெளியிட்டிருப்பார்கள் என்பது தொடர்பாக பிரபல இயக்குநர் ஒருவர் பேசியிருக்கிறார். 2017-ல் நடிகர்கள் கிஷோர், அபிநயா ஆகியோர் நடிப்பில் வெளிவந்த நிசப்தம் என்கிற தமிழ் படத்தை இயக்கியவர் இயக்குநர் மைக்கேல் அருண். கிச்சா சுதீப்பின் மார்க் உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ள இவர் தனது எக்ஸ் பக்கத்தில், ‘ஜனநாயகன்’ பட காட்சிகளை யார்? லீக் செய்திருப்பார் என்பது தொடர்பாக பேசியுள்ளார்.
தனது பதிவில், “ஜனநாயகன் பட காட்சிகளை லீக் செய்தவர் யாராக இருந்தாலும், அவர் கண்டுபிடிக்கப்பட்டு சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும். நிச்சயமாக இது தணிக்கை செய்யப்பட்ட காட்சிகள் அல்ல. நிச்சயமாக இது தணிக்கை குழுவிடம் (Censor) வழங்கப்பட்ட பிரதி கிடையாது. ‘எடிட் ரெஃபரன்ஸ்’ (Edit reference) எனக் குறிப்பிடப்பட்டிருப்பதால், இது படக்குழுவில் உள்ள மிக முக்கியமான நபர்களின் தனிப்பட்ட பார்வைக்காக மட்டுமே உருவாக்கப்பட்டதாகும். எனினும் அடுத்த மீட்டிங்கில், ஜனநாயகன் படத்தின் காட்சிகளை அவர்கள் கசியவிட்டுவிட்டார்கள்… அதை யார் செய்திருப்பார்கள் என்பது உங்களுக்கே நன்றாகத் தெரியும் என்று விஜய் கூறுவார். உண்மையில், கடைசி வரை அதைச் செய்தது யார் என்பது யாருக்குமே தெரியப்போவதில்லை. ஏனெனில், இந்த ‘Edit Reference’ நகலை அணுகும் அதிகாரம் படத்தின் எடிட்டரை தவிர்த்து தவிர்த்து, படத்தின் கதாநாயகர், தயாரிப்பாளர் மற்றும் இயக்குநருக்கு மட்டுமே உண்டு.” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
Edit Reference என்றால் என்ன? – ஒரு திரைப்படம் திரையரங்கிற்கு வரும் முன், பல நிலைகளைக் கடந்து செல்லும். அதில் ‘எடிட் ரெஃபரன்ஸ்’ (Edit Reference) என்பது மிக முக்கியமான ஒன்று. பொதுவாக ஒரு படம் எடிட்டிங் செய்யப்படும்போது படத்தின் நீளம், கதையின் வேகம் மற்றும் காட்சிகள் சரியாகப் பொருந்துகிறதா என்பதைச் சரிபார்க்க இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் போன்ற படத்தின் முக்கிய குழுவினருக்கு மட்டும் ஒரு ‘வாட்டர்மார்க்’ செய்யப்பட்ட பிரதி அனுப்பப்படும். அது தான் Edit Reference எனக் கூறப்படுகிறது.
என்னடா இது தயாரிப்பாளருக்கு வந்த சோதனை என்றே சொல்லலாம். படத்தை OTT யில் வெளிவிட ரசிகர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

















