இயக்கம்: பாலாஜி செல்வராஜ்
நடிப்பு: பருத்திவீரன் சரவணன், வரலட்சுமி சரத்குமார், லாவண்யா மற்றும் பலர்
குற்றம் சாட்டப்பட்ட ஒருவர் உண்மையில் குற்றவாளியா? அல்லது சூழ்நிலையின் காரணமாக சிக்கியவரா? இந்தக் கேள்வியை மையமாக வைத்து நீதிமன்றப் போராட்டத்தை விறுவிறுப்பாக நகர்த்துகிறது சட்டமும் நீதியும் 2. உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழக்கிறார். அந்தக் கொலை வழக்கில் சில போலீஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுகின்றனர். ஒருபுறம், கணவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடும் வழக்கறிஞர் சந்திரா மறுபுறம் கைது செய்யப்பட்டவர்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் சுந்தரமூர்த்தி. இந்த இரு தரப்பினரின் சட்டப் போராட்டமே தொடரின் முக்கிய பலம்.சரவணன் சுந்தரமூர்த்தி கதாபாத்திரத்தில் மிகவும் இயல்பாக நடித்துள்ளார்.
ஆர்ப்பாட்டம் இல்லாமல் நீதிமன்றத்தில் ஆதாரங்களுடன் வாதிடும் காட்சிகளில் அவரது நடிப்பு குறிப்பாக கவனம் ஈர்க்கிறது. வரலட்சுமி சரத்குமார் கம்பீரமான வழக்கறிஞராகவும், கணவனை இழந்த மனைவியாகவும் அழுத்தமான நடிப்பை வழங்கியுள்ளார். இருவருக்கும் இடையிலான நீதிமன்ற வாதங்கள் தொடருக்கு நல்ல விறுவிறுப்பை ஏற்படுத்துகின்றன. திரைக்கதையின் முக்கியமான பலம், உண்மை என்ன என்பதை உடனடியாக சொல்லாமல் ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதிய தகவல்களை வெளிப்படுத்துவதுதான். கொலையா? தற்கொலையா? உண்மையான குற்றவாளி யார்? என்ற கேள்விகள் தொடரை தொடர்ந்து பார்க்க வைக்கின்றன.
பின்னணி இசை, ஒளிப்பதிவு மற்றும் நீதிமன்றக் காட்சிகளும் தொடரின் தரத்தை உயர்த்துகின்றன. அதே நேரத்தில் சில லாஜிக் குறைகள், சில காட்சிகளின் அழுத்தம் குறைவாக இருப்பது மற்றும் கிளைமாக்ஸுக்குப் பிறகு கதை சற்று நீளுவது போன்ற குறைகளும் உள்ளன. பெரிய ஆக்ஷன் காட்சிகளை நம்பாமல் சட்டம், நீதி, குற்றம், அதிகாரம் ஆகியவற்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள சுவாரசியமான கோர்ட் ரூம் கிரைம் திரில்லர். சட்டம் மற்றும் நீதியின் வித்தியாசத்தை சிந்திக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளதால், நீதிமன்றக் கதைகளை விரும்புபவர்கள் பார்க்கலாம்.
-M.கிரிஜா (சினிமா நிருபர்)
















