கரூர் சம்பவம் தொடர்பான சாட்சிகளை அச்சுறுத்தும் வகையில் பேசியுள்ளதால், முதலமைச்சர் விஜய் மீது சிபிஐ புதிதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என திமுக சார்பில் உச்சநீதிமன்றக் குழுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான குழுவுக்கு, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் மனு அனுப்பியுள்ளார்.
கடந்த 10ஆம் தேதி கரூரில் நடைபெற்ற கூட்டத்தில் பேசியுள்ள முதலமைச்சர் விஜய், கரூர் துயரச் சம்பவத்திற்கு காவல்துறையே பொறுப்பு என்றும், அரசியல் சதி இருப்பது போலவும் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.தவெகவினரின் திட்டமிடப்படாத செயல்பாடுகளும், விதிமீறல்களுமே உயிரிழப்புக்கு காரணம் என தமிழ்நாடு அரசின் உள்துறைச் செயலாளர், காவல்துறை டி.ஜி.பி. ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்துள்ள நிலையில், அதே உள்துறையைத் தற்போது தன்வசம் வைத்துள்ள முதலமைச்சர் முற்றிலும் முரணாக பேசி சாட்சிகளைத் திசை திருப்ப முயன்றுள்ளதாக திமுகவின் புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.
முதலமைச்சர் விஜய் கரூரில் பேசியது குறித்து சிபிஐ தனியாக புகார் பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும், அமைச்சர்கள் என்.ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகியோருடன் மதியழகன் மற்றும் ஜெகதீஷ் ஆகியோரை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சாட்சிகளை அச்சுறுத்தக் கூடாது என பிணைப் பத்திரம் எழுதி வாங்க சிபிஐக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.
















