க்யூப்ஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் தயாரிப்பில், பால் ஜார்ஜ் இயக்கத்தில், ஆண்டனி வர்கீஸ் பெப்பே, சுனில், கபீர் துஹான் சிங், துஷாரா விஜயன், பார்த் திவாரி, ஹரிசங்கர் நாராயணன், அல்போன்ஸ் புத்ரன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் தான் ‘காட்டாளன்’
விமர்சனம்:
கேரளா-தமிழ்நாடு எல்லையில் உள்ள ‘ஆனக்கொள்ளி’ என்ற கிராமத்தில், காட்டு யானைகளின் அச்சுறுத்தலில் இருந்து மக்களைக் காப்பாற்ற வரும் மாரி (ராஜ் திரன்தாசு -இளமைப் பருவத்து மாரியாக) என்பவரைச் சுற்றித் தொடங்குகிறது. ஆனால், மக்களின் பயத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் மாரி, அந்தப் பகுதி முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கிராம மக்களை அடிமைகளாக்கி, ஒரு மாபெரும் சட்டவிரோத கடத்தல் கும்பலின் கொடூரமான தலைவனாக மாறுகிறான். யானைகளைக் கொன்று அதன் தந்தங்களை வெட்டி எடுத்து சர்வதேச அளவில், குறிப்பாக இலங்கைக்கு கடத்தி கோடிகளை குவிக்கும் மாபியா சாம்ராஜ்யத்தை நடத்தி வருகிறான். அவனுக்கு கீழே 40-க்கும் மேற்பட்ட ஏழை பழங்குடி மக்கள் அடிமைகளாக வேலை செய்கிறார்கள். இந்த சூழலில், மாரிக்கு போட்டியாக ‘எடி’ (கபீர் துகான் சிங்) என்ற புதிய தொழில் எதிரி உருவாகிறான்.
எடி-யுடன் ஏற்படும் மோதலால் மாரியின் தந்தம் கடத்தல் தொழில் முடங்கும் நிலைக்கு வருகிறது. அதிலிருந்து தப்பிக்கவும், பறிபோன தனது கோடிக்கணக்கான மதிப்புள்ள தந்தங்களை மீட்டெடுக்கவும் மாரி, எடி-யின் பலத்தை அடக்கவும், தனது தந்தங்களை ராமேஸ்வரம் மற்றும் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு பாதுகாப்பாக கடத்தவும் ஆண்டனி (ஆண்டனி வர்கீஸ் பெபே) என்ற துணிச்சலான இளைஞனைத் தனது வலதுகரமாக பயன்படுத்திக் கொள்கிறான்.
ஆண்டனி, மாரியின் கடத்தல் நெட்வொர்க்கை தன் கட்டுப்பாட்டில் எடுத்து மிக சாதுரியமாக பிண உடல்களுக்குள் தந்தங்களை ஒளித்து வைத்து கடத்தி மாரியின் நம்பிக்கையை பெறுகிறான். ஆரம்பத்தில் மாரிக்கு விசுவாசமாக செயல்பட்டு எதிரிகளை அழிக்கும் ஆண்டனி, கதையின் போக்கில் மாரியின் சுயரூபத்தை உணர்ந்து அவனுக்கே எதிராக திரும்புகிறான். மாரியின் கொடூரமும், அவன் காட்டின் (கிராம மக்கள்) அடிமைகளை நடத்தும் விதம் எல்லை மீறும் போது ஆண்டனிக்கும் மாரிக்கும் இடையே மோதல் வெடிக்கிறது.
மாரியை தீர்த்துக்கட்ட கிராமத்து மக்களும், அலி (ஜெகதீஷ்) போன்ற பெரியவர்களும் ஆண்டனியின் உதவியை நாடுகிறார்கள். கோபமடையும் மாரி, ஆண்டனியும் அவனுக்கு பின்னால் இருக்கும் ஒட்டுமொத்த கிராமத்தையும் அழிக்க துணிகிறான். இறுதியில், ஆண்டனி அந்தப் பெரிய கடத்தல் சாம்ராஜ்யத்தை ரத்தக் களரியாக்கி தடம் தெரியாமல் அழிக்கிறான் என்பதே மீதிக்கதை…..
ஆனைகொல்லி காடுகளின் தந்தம் கடத்தல் சிண்டிகேட்டின் பிரதான வில்லனாக வரும் சுனில், நரி குணம் கொண்ட கடத்தல் கார்டெல் தலைவனாக தந்தத்திற்காக காட்டு யானைகளை கொல்லும் சைக்கோத்தனமான வில்லனாக மிரட்டியுள்ளார். படத்தின் நாயகனாக வரும் ஆண்டனி வர்கீஸ் பெப்பே, அதிரடி இமேஜுக்கு கச்சிதமாகப் பொருந்திப் போகிறார். அவரது உடல் மொழி, காடுகளுக்குள் பாய்ந்து பாய்ந்து சண்டை செய்யும் காட்சிகள், ஸ்டண்ட் பிளாக்குகளில் அசாத்திய வேகம் கொடுத்து மிரட்டியுள்ளது. ஹரிசங்கர் நாராயணன், சந்தீப் ரவிராஜ், ஜெகதீஷ், சித்திக், ஹனன் ஷா, ஹிப்ஸ்டெர் உட்பட அனைவரும் கொடுத்த வேலையை நேர்த்தியாக செய்திருக்கிறார்கள்.
பிரபல இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் ‘மெண்டிஸ்’ என்ற ரகசியமான, புதிரான பாத்திரத்தில் எதிர்பாராத கேமியோ என்ட்ரி கொடுத்து ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
மைனஸ்: ஒரே சண்டை ரத்தம்…. பல காட்சிகள் லாஜிக்கே இல்லை…
மொத்தத்தில் இந்த ‘காட்டாளன்’ அலறல், குமுறல்.

















