கன்னியாகுமரி மாவட்டம் கரம்பவிளை பகுதியில் காலிமனையில் உள்ள முட்புதரில் கடும் துர்நாற்றம் வீசியுள்ளது. அவ்வழியாக சென்றவர்கள் எங்கிருந்து அந்த துர்நாற்றம் வீசுகிறது? என தேடிப் பார்க்க, பேரதிர்ச்சியாக பிறந்து சில மணி நேரமே ஆன பெண் குழந்தை ஒன்று பேச்சு மூச்சில்லாமல் கிடந்துள்ளது. உடனே அக்கம்பக்கத்தினர் கூட்டம் கூடி தென்தாமரைகுளம் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
உடனடியாக அங்கு சென்ற போலீசார், குழந்தையின் உடலை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர். அங்கு குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார், உயிரிழந்த குழந்தை யாருடையது? அதை முட்புதரில் வீசிச் சென்றது யார்? உள்ளிட்ட கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
சம்பவ ஏரியாவில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தபோது, இளம்பெண் ஒருவர் சந்தேகத்திற்கு இடமான வகையில், கல்லூரி பையுடன் பதற்றத்துடன் சென்ற காட்சி பதிவாகி இருந்தது. விசாரணையில், பொற்றையடி அருகே உள்ள கரம்பவிளையைச் சேர்ந்த நர்சிங் மாணவி ரெஜினா என்பது உறுதி செய்யப்பட்டது. உடனே அவரைப் பிடித்து விசாரிக்க, முட்புதரில் கிடந்த குழந்தை பிடிபட்ட கல்லூரி மாணவிக்குப் பிறந்தது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து அவரிடம் மேற்கொண்ட விசாரணையில், மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் தெரியவந்தன.
நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த முகேஷ் என்பவரை நான்கு ஆண்டுகளாகக் காதலித்துவந்த ரெஜினா காதலனால் கர்ப்பமடைந்துள்ளார். ஆனால் மாணவி இதனை வெளியே தெரியாமல் மறைத்துள்ளார். இறுதியில் 10 மாதங்கள் கழித்து, வீட்டின் கழிப்பறையில் வைத்து ரெஜினாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. கையில் பெற்ற குழந்தையுடன் என்ன செய்வதென்று தெரியாமல், காதலனுக்கு போன் செய்த ரெஜினா, பேபி பேபி எங்கடா இருக்க? எனக்கு பாப்பா பொறந்துருக்கு டா… எனக்கூறி கதிகலங்க விட்டுள்ளார். என்ன சொல்ற? விளையாடுறியா? என மிரண்டுள்ளார் அவரது காதலன்.
அதனால் கையோடு குழந்தையின் புகைப்படத்தைக் காதலனுக்கு அனுப்பி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரெஜினா. அதில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு ஒரு ஓரமாக கீழே உட்கார்ந்த காதலன், 10 மாசம் வயித்துல புள்ள இருந்தது கூடவா தெரியாது உனக்கு? என சண்டை போட்டுள்ளார். முன்னாடியே சொல்லலாம்னுதான் இருந்தேன். ஆனா நீ கலைக்க சொல்லிடுவியோன்னு பயந்துட்டேன் எனக்கூறி கண்ணீர் விட்டுள்ளார் ரெஜினா. ஆனால், காதலனின் இன்னொரு முகம் ரெஜினாவிற்கு தெரியாமல் போனது.
குழந்தையைப் பார்க்க வேண்டும் எனக்கூறி நேரில் சென்றவர் காதலியிடம் பேசி மூளை சலவை செய்து குழந்தையைக் கொல்ல திட்டமிட்டுள்ளார். அதன்படி மாணவியின் வீட்டருகே உள்ள முட்புதரில் குழந்தையை வீசிக்கொன்ற இருவரும் அங்கிருந்து மறைந்துள்ளனர்.ஆனால், இறுதியில் வசமாக சிக்கிய ரெஜினாவையும், அவரது காதலன் முகேஷையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், அவர்களை சிறையில் அடைத்து கம்பி எண்ண வைத்துள்ளனர்.

















