மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், சிக்கந்தர் தர்ஹா அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். திருப்பரங்குன்றம் அறுபடை வீடுகளில் ஒன்று. திருப்பரங்குன்றம் மலை தொடர்பான வழக்கில், இந்த மலையின் உச்சியில் கார்த்திகை தீபத்தை ஏற்ற அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், திருப்பரங்குன்றத்தில் இந்த ஆண்டு கார்த்திகை திருவிழாவின் போது, மலையின் உச்சியில் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல், அங்குள்ள பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் கார்த்திகை தீபத்தை ஏற்ற முடிவு செய்துள்ளனர். இது ஏற்கத்தக்கது அல்ல. எனவே, இந்த ஆண்டு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் கார்த்திகை தீபத்தை ஏற்ற உத்தரவிட வேண்டும். பிள்ளையார் கோயில் தீப மண்டபத்தில் காா்த்திகை தீபத்தை ஏற்றுவது தொடர்பான அறிவிப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு தொடுக்கப்பட்டது.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்த போது, இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், உயர்நீதிமன்ற நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் திருப்பரங்குன்றம் மலைக்கு நேரடியாகச் சென்று ஆய்வு செய்தார். இந்த நிலையில், இந்த மனு மீது நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் முன் மீண்டும் இன்று(டிச. 1) விசாரணைக்கு வந்தது. மதுரையைச் சேர்ந்த ராம ரவிக்குமார் தொடர்ந்த வழக்கில், சிக்கந்தர் தர்ஹா அருகே உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்றவும், காவல் துறை முழு பாதுகாப்பு வழங்கவும் நீதிபதி ஜி. ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.

















