சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களுக்கு இன்று அதிகனமழை பெய்வதற்கான சிவப்பு நிற எச்சரிக்கையை சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்திருக்கிறது. முன்னதாக, டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை(டிச.1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மேலும், புயல் சின்னம் அடுத்த 2 நாள்களுக்கு சென்னை கடற்கரை அருகே நிலைகொண்டிருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளதால், வரும் டிச.3 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச.2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கான விடுமுறை உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

















